பிரான்சில் உள்ள தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், சிலம்பு அமைப்பு, உலகப்பண்பாட்டு இயக்கம், நல்லூர்ஸ்தான் மற்றும் சென்தனி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கடந்த 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடியது.
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டன.
மங்கள விளக்கினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழின உணர்வாளரும் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட கலைஞருமான திரு. கருணாஸ் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து ஏனைய பிரமுகர்கள் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொங்கல் பானைகள் அரங்கில் இருந்து ஊர்வலமாக பொங்கல் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பறை ஒலி இசைக்க சிறப்பு விருந்தினர் கலைஞர் கருணாஸ், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு , பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், சிலம்பு அமைப்பு, உலகப்பண்பாட்டு இயக்கம், நல்லூர்ஸ்தான், சென்தனி தமிழ்ச் சங்கம், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழர் நலன்விரும்பிகள் பொங்கலுக்கான அரிசியிட்டு பொங்கியிருந்தனர்.
நண்பகல் 1.30 மணிக்கு பொங்கல் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. அழகுக்கோலமிட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அனைவருக்கும் இனிய பொங்கல் வழங்கப்பட்டது.
திருக்குறள், கரகம், சிலம்பு, கிராமிய நடனங்கள், கவிதைகள், பேச்சுக்கள், பறையிசை,பொய்க்கால் குதிரையாட்டம் எனப் பல்வேறு நிகழ்வுகள் கண்ணுக்கு விருந்தாய் அமைந்திருந்தன.
பொங்கல் சிறப்புரையை தென்னிந்திய தமிழ்த் திரைப்பட கலைஞர் திரு. கருணாஸ் அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர்தனது உரையில் , குறித்த நிகழ்வில் தான் கலந்து கொண்டமை தனக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகவும் சிறார்களின் திறமைகள் தனக்கு ஆச்சரியமூட்டுவதாகவும் தெரிவித்த அவரது உரை பல்வேறு விடயங்களையும் தொட்டுத் தொடர்ந்தது. நன்றியுரையினைத் தொடர்ந்து நிகழ்வுகள் சிறப்பாக நிறைவடைந்தது.
படங்கள்: யூட், வினுயன், பகீர்
–(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- ஊடகப்பிரிவு)