பொங்குக தமிழ் புத்தாண்டில்…!
இயற்கை என்னும் வியப்பின் விரிப்பில் உயிர்களின் உருவாக்கமும் வளர்ச்சியுமே வரலாறாய் நீள்கிறது. வரலாற்றின் திருப்பமாய் நிகழ்ந்ததே மொழியின் தோற்றமும் அதன் நீட்சியும். உலகின் முதன் மொழியாய் அறிஞர்கள் அறிவித்த தமிழ் மொழியினை நாவில் தவழவிடும் நாம் வரலாற்றில் பெருமைக்குரியவர்களே.
இயற்கையிலிருந்து இயற்கையாய்த் தோன்றிய தமிழ்மொழி, இயற்கையுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மொழியின் முதன்மையும் அகமுமாய் இருக்கும் நன்றியுணர்வு தமிழர்களின் அறத்தின் வெளிப்பாடு. எம் தாய்மொழியையும் வாழ்வின் வளங்களையும் அள்ளித் தந்த இந்த இயற்கைக்கு நன்றி கூறும் நன்னாளாய் திகழும் தைப்பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாயும் இருப்பதும் சிறப்பானதே.
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான பொங்கல் சமயம் சாராததொன்றாகும். உலகின் எந்த இனத்திற்கும் இல்லாத இயற்கை மீதான நன்றியுணர்வின் குறியீடே தைப்பொங்கல் பண்டிகை. பண்டங்களை ஈகை செய்வதால் பண்டிகை எனப் பொங்கலின் சொல்லாக்கமே அதன் எண்ணத்தையும் வரலாற்றையும் ஈகையுணர்வையும் சொல்லி நிற்கிறது.
தமிழின்பால் பற்றுக்கொண்டு தம்மை ஈகை செய்த அனைத்து உள்ளங்களையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றியுடன் நினைவுகூர்கின்றது.
இயற்கை எமக்களித்த இன்தமிழை இன்னும் காக்க உறுதிபூண்டு இணைந்தே பயணிப்போம்.
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்.
சா. நாகயோதீஸ்வரன்
பொறுப்பாளர்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு