ரஷ்யா அதன் இராணுவத் தலைமைத் தளபதியை உக்ரைன் போருக்குப் பொறுப்பேற்கும்படி உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் பின்னடைவை எதிர்நோக்கும் வேளையில் ரஷ்யா இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜெனரல் வெலரி கரசிம்மோவ் உக்ரைன் படையெடுப்பை இனி வழிநடத்தவுள்ளார்.
தற்போதைய தளபதி ஜெனரல் செர்கே சுரோவிக்கின் அவருக்குத் துணையாகச் செயல்படுவார்.
இராணுவப் பணிகள் விரிவடைந்துள்ளதாலும் துருப்புகளுக்கிடையே கூடுதல் தொடர்பு தேவைப்படுவதாலும் தலைமைத்துவ மாற்றம் செய்யப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியது.
ரஷ்ய தனியார் இராணுவக் குழுவான வெக்னர் கிழக்கு சோல்டார் நகரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறிய வேளையில் புதிய அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்யப் படையினர் டோன்பாஸ் வட்டாரத்திற்குள் நுழைவதற்கு சோல்டார் நகரம் பயன்படக்கூடும்.
வெக்னர் குழு கடுஞ்சண்டைக்குப் பின் சுமார் 500 உக்ரைனிய இராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கூறியது.
அதை நிராகரித்த உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி அங்கு இன்னும் சண்டை தொடர்கிறது என்றார்.
சோல்டார் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினருக்குப் பேரிழப்பு ஏற்பட்டது என்று உக்ரைனிய இராணுவம் கூறுகிறது.