யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு ஏற்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் வடமாகாண சபையின் செயற்பாடுகளை விமர்சிக்கும் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறுக்கிட்டு கருத்து கூற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்துமோதல்கள் ஏற்பட்டன.
வடமாகாணசபை தேர்தலில் பொய்யுரைத்து மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப் பெற்று தற்போது அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை என டக்ளஸ் தேவானந்தா விமர்சிக்கும் போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் வடமாகாண சபைக்கு வெறும் 180 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதை நாம் முற்றுமுழுதாக 99 வீதம் செலவளித்துக்கொண்டிருக்கிறோம் இனியும் செலவளிப்போம் எனத் தெரிவித்தார். இதன்போது அமைச்சா டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைவர்களுக்கு மட்டுமே கருத்து கூற அனுமதியுள்ளது.
இணைத்தலைமைகளுக்கு கட்டுப்பட்டே கூட்டத்திலுள்ளவர்கள் செயற்படவேண்டும் தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் வெளியில் செல்லலாம் என பலமுறை தெரிவித்தார். எனினும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடையில் கருத்துமோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றன. இதனிடையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மாகாணசபை பற்றிக் கதைக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. இது அபிவிருத்தி பற்றிக் கதைப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் எனத் தெரிவிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வடமாகாண நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதம செயலாளரிடம் சில விளக்கங்களைக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஆளுங்கட்சியிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பினர் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் வடமாகாண அபிவிருத்திக்காக 180 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
1600 கோடி மீண்டுவரும் செலவீனமாகும் என ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்தார். இன்று இடம்பெறுவது அபிவிருத்திக்கூட்டம். அரசியலைத் தவிர்த்து மற்ற விடயங்களுக்கு செல்வோம் என தெரிவித்தார். எனினும் கருத்துமோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றன. இதன்போது அரச அதிபர் தயவுசெய்து அனைவரையும் அமைதியாக இருக்குமாறு தெரிவித்தார். உங்களிடையே கருத்து மோதல்கள் இருக்குமாயின் அது தொடர்பாக கலந்துரையாடலாம். ஆனால் அதற்கான இடம் இதுவல்ல என்றார். இந்தக் கூட்டத்தைக் கூட்டியதற்குக் காரணமே யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுமே ஆகும். முரண்பாடுகளுக்கு இடமளித்தால் அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியாது.
ஆகவே அரசியல் தொடர்பான கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் கதைக்கப்பட்டால் அரச உத்தியோகத்தர்களாகிய நாம் கூட்டத்தை விட்டு வெளியேறுவோம் என தெரிவித்த போது டக்ளஸ் தேவானந்தாவும் இணைத்தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கூட்டத்தைவிட்டு வெறியேறலாம் என தெரிவித்தார். தொடர்ந்து சிவாஜிலிங்கம் எங்களால் வெளியேறமுடியாது நீங்கள் வேண்டுமானால் வெளியேறுங்கள் என அமைச்சர் டக்ளசைப் பார்த்து என தெரிவித்தவுடன் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் ஆக்ரோசமாக நாடாளுமன்ற உறுப்பினரின் ஒலிவாங்கியைப் பறிப்பதற்கு முயன்றனர்.
அது முடியாமல் போக அவரைத் தாக்குவதற்கு வந்தனர். ஒலிவாங்கியை பறிக்கவிடாமல் விவசாய அமைச்சர் தடுக்க முயன்ற போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்களால் எறிந்தனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பரஸ்பரம் தண்ணீர் போத்தல்களை வீசினர். விவாதம் உச்சமடைந்த நிலையினில் பரஸ்பரம் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன. தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன. இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டது. தாக்குதலில் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கும் காயம் ஏற்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த கூட்டம் திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.