
2023 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 01.01.2023
எங்கள் அன்புக்கும் பெரும் மதிப்புக்குமுரிய பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு எமது புரட்சிகரமான வணக்கத்தையும், 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நெஞ்சில் சுமந்து அவர்களை வணங்கி சத்தியத்தின் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை என்பதை உறுதியாக மனதில் கொண்டு இந்தப் புதிய 2023 ஆம் ஆண்டில் எமது தேச விடுதலை சுதந்திர நல்வாழ்வை நோக்கி தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.
சிங்கள பௌத்த பேரினவாத தேசத்திடம் இருந்து கடந்த 74 ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்து விடப்போவது என்பது கானல் நீர் போன்றதே. ஆனால், இதனைத் தாயகத்தில் உள்ள இனவிடுதலைப்பற்றாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகளும், புலம்பெயர் தேசத்தில் தமிழீழ தேசம் கொண்ட கொள்கைப்பற்றிலிருந்து மாறாது அர்ப்பணிப்புடன் பல சவால்களை எதிர்கொண்டு தடம் மாறாது அரசியல் பணியாற்றி வரும் கட்டமைப்புக்களும் சிங்களத்தின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குப்படாது கரடு முரடான இந்த இலட்சியப் பயணத்தில் எமக்கு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான். இன்று புதிய நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தைச் சந்தித்து இருக்கின்றோம். 2019 உலகத்தையே உலுக்கிய கோவிட் பேரிடர் கொரோனா, தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தனது உயிர்ப் பறிப்புக்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழ்நிலையில் எமது மன உறுதிக்கு சவாலான பல்வேறு செயற்பாடுகளை எதிரியானவன் தாய்நிலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் திட்டமிட்டு செயற்படுத்தியே வருகின்றான். இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியைத் தவிர வேறு ஆயுதங்கள் தேவையில்லை.
சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னை பொருளாதார தன்னிறைவில் உரமாக்கிக் கொள்ள சர்வதேசத்திடம் கையேந்தியதும், அது சர்வதேச வல்லமைக்குள் சிக்குண்டு நிற்பதுவும், அது நிறைவேறாத நிலையில், இதற்கு இடையூறாக நிற்கும் தமிழர் அரசியல் கட்டமைப்புக்களையும், புலத்தில் பொருளாதாரப் பலமிக்க எம்மவர்களையும் வளைத்துப் போடும் பெரும் மறைமுகச் செயற்பாடுகளையும் மேற்கொண்டுதான் வருகின்றது. தாயகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்வரும் சனவரி 31 ஆம் திகதிக்குள் அகற்றுவதாக கூறி அந்த சட்டத்தை விட மோசமானவைகளை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று புதிதாக ஒன்றையும், 6 ஆவது சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது. பொங்கலுக்குள்ளும், 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முன்பாகவும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறிக்கொண்டும் வரப்போகும் சனாதிபதித் தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்கும் செயற்பாட்டை ஒரு புறமும், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆரம்பித்து விட்டேன் என்று சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களையும், ஏமாற்றுகின்ற செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அதற்குக் காரணம் உண்டு. சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்று ஐந்து மாதங்களாகிவிட்டது. அரசியல் முடிவுகள் தீர்மானங்கள் எடுக்கும் உரிமை தலைமைகளுக்கு உண்டு. ஆனால், அவற்றை அமுல்படுத்தும் நடைமுறைக்குக் கொண்டு வந்து பற்றுறுதியுடன் செயற்படுத்தும் திடசங்கற்பமும் பற்றுறுதியுடன் செயற்படும் திடசங்கற்பமும் பற்றுறுதியும் அத்தலைமைகளுக்கு இருக்க வேண்டும். ஐந்து மாதங்களாகியும் ஒரு நேர்த்தியான அமைச்சரவையை அவரால் நியமிக்க முடியவில்லை. பதவியேற்ற காலத்தில் தற்காலிக அமைச்சரவையை நியமித்தார். ஆனால், எல்லாமே பயனற்றதாகவே போகின்ற நிலையில் எமது தமிழ் மக்கள் பிரதிநிதிகளும், தமிழர் அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்தில் தனித் தனியாக தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றும், இன்று உலகமயப்படுத்தப்பட்ட தமிழ் இனப்பிரச்சினையானது சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இல்லாது நடாத்தும் பேச்சுக்கள் காலத்தைக்கடத்தும் ஓர் ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
புலம் பெயர் தேசத்திலே எமது தேசத்தில் அன்றாடம் நடைபெற்று வரும் உண்மை நிலையை அரசுகளுக்கு எடுத்துச் சென்று கொண்டு இருக்கும் இவ்வேளையில் அதிலிருக்கும் பலவீனத்தையும் கண்டறிந்து சகல வழிகளிலும் பலமிக்கதாக்குவதையே இந்தக் காலம் எங்கள் கைகளில் தந்திருக்கின்றது. அந்த வகையில் அரசியல், மொழி, கல்வி, கலைபண்பாடு, பொருளாதாரம், மனிதநேயம் போன்ற அனைத்து வழிகளிலும் நாம் இன்னும் பலமிக்கவர்களாக வேண்டும்.
அண்மையில் சர்வதேசச் செஞ்சிலுவை சங்கம் விடுத்திருந்த அறிக்கையின் படி 5 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும், 57 லட்சம் மக்கள் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றார்கள் எனவும், 3.45 மில்லியனுக்கு அதிகமான விவசாய மக்களை கையேந்தவும், 2.43 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து தேவையான மக்களாகவும்,சுமார் 2 மில்லியன் மக்கள் அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் வகையிலும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தமிழ் மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து இனிவரும் காலங்களில் எம் தேசமக்கள் சிங்களத்திடம் கையேந்தி நிற்கும் நிலையை மாற்றி தன்னிறைவு காணும் வகையில் அனைத்து மனிதநேயச் செயற்பாடுகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு உதவிகள் யாவும் இல்லாத மக்களிடம் சென்றடைய வைக்க வேண்டும்.
தொடர்ந்தும் சர்வதேசத்தின் கதவுகளை காலத்தின், நேரத்தின் இடமறிந்து உறுதியாகப் பலமாக தொடர்ந்து தட்ட வேண்டும். அதனை உலகெல்லாம் வாழும் தமிழ் மக்களோடும், ஐரோப்பா வாழ் மக்களுடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் ஒன்றாக வேண்டும் என்று அன்புரிமையுடன் 2023 புத்தாண்டில் கேட்டுக்கொள்கின்றோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.

