மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

0
132

ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றன.

அதனை முன்னிட்டு கல்லடி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் 8.55 மணியளவில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

2004.12.26ம் திகதி கடல் நீராய் வந்து கண்ணீராய் உருமாரி கல்லடி திருச்செந்தூரில் 243 உயிர்கள் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்டு 18 வருடங்கள் நிறைவாகிறது.

இதனையொட்டி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த தூபி நிர்மானிப்புக்குழுவின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அத்தோடு டச்பார், புதுமுகத்துவாரம் மற்றும் நாவலடி பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் பிரதான தீபச்சுடர் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இதன்போது திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், புதிய கோட்டமுனை விளையாட்டு கழகத்தினால் இரத்ததான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சுனாமி ஞாபகார்த்த நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையிலான சுனாமியினால் பாதிப்பிற்குள்ளான அனைத்து கிராமங்களிலும் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here