
சீனாவில் புதிய கொரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்–19 தொற்று சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக சீனா கூறியபோதும் அவசர சிகிச்சை பிரிவுகள் அதிக பணிச்சுமையை எதிர்கொண்டிருப்பதாக உலகக் சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்டத்தின் நிர்வாகப் பணிப்பாளர் டொக்டர் மைக்கல் ரியான் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கணக்கெடுப்பின்படி கடந்த புதன்கிழமை நோய்த் தொற்றினால் எவரும் உயிரிழக்கவில்லை என்று குறிப்பிட்டபோதும் நோயின் உண்மையான பாதிப்புக் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
கொவிட் தொற்று தீவிரம் அடைந்த நிலையில் தலைநகர் பீஜிங் மற்றும் ஏனைய நகரங்களில் மருத்துவமனைகள் அண்மைய நாட்களில் நிரம்பி வருகின்றன.
2020 தொடக்கம் சீனா கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததோடு, அதிகம் பாதிக்கக்கூடிய வயதானவர்களிடையே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
சீனாவில் இறுதிச்சடங்குக் கூடங்கள் நெருக்கடியை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சீனா அதிகாரபூர்வமாக வெளியிடும் கொவிட் மரண எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
மாறாக, கடந்த செவ்வாயன்று சீனா அதன் உயிரிழப்பு எண்ணிக்கையை ஒன்று குறைத்து 5,241ஆக மாற்றியது.
இந்நிலையில் புதிய நோய் பரவல் குறித்த விபரங்களை வெளியிடும்படி டொக்டர் ரியான் சீனாவை வலியுறுத்தியுள்ளார். ‘அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோய் சம்பவங்கள் குறைவாக இருப்பதாக சீனா கூறியபோதும், தெரியவரும் தகவல்கள் படி அவை நிரம்பி வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் நிலைமை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோ அதனொம் கெப்ரியேசஸ் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.