–

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் இயங்கும் அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளும் இணைந்து நடாத்திய 24வது அகவை தமிழ்ச்சோலை முத்தமிழ் விழா செவினி-லூ-தொம்ப் (Savigny-le-Temple) நகரில் 17-12-2022 அன்று நடைபெற்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு சா. நாகஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இங்கிலாந்தில் வதியும் எழுத்தாளரும் தமிழ் இலக்கிய ஆளுமையுமான திருமிகு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடன் அவரது பாரியார் திருவாட்டி சசிகலா இராஜமனோகரன் அவர்களும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
செவினி-லூ-தொம்ப் (Savigny-le-Temple) நகரபிதா திருவாட்டி இசபெல் டு லாகுறுவா (Mme. ISABELLE DE LACRIOX) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திருமிகு ராசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழர்களின் மரபியல் கலைகளை வெளிப்படுத்தும் இன்னிய இசை அணிவகுப்புடன் முதன்மை விருந்தினரும் சிறப்பு விருந்தினர்களும் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கு முதன்மை விருந்தினராலும் சிறப்பு விருந்தினர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து மண்ணுக்காய் உயிர்நீத்த மாவீரர்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் பொதுமக்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழ்ச்சோலைக் கீதத்தினை இவ்ரி-சூர்-சென் (Ivry-sur-Seine) தமிழ்ச்சோலை மாணவர்கள் இசைத்தனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் செயலாளர் திருமிகு ஜொ. காணிக்கைநாதன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.
பாரிசு-13 (Paris-13) தமிழ்ச்சோலை மாணவர்களின் புஸ்பாஞ்சலியுடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்களின் இயல் இசை நாடக நிகழ்வுகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.
கலை நிகழ்வுகளின் இடையே தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்பட்ட பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் போட்டி-2022 இல் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் இறுதிப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பத்தாண்டுப் பணியை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
விழாவின் மத்தியில் முத்தமிழ் விழா சிறப்பு மலர் வெளி யிடப்பட்டது.
இதன் முதற்பிரதியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. சா. நாகஜோதீஸ்வரன் அவர்கள் வழங்க, முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட திருமிகு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் பெற்றுக்காண்டார்.
தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டன.
விழாவில் முதன்மை விருந்தினர் திருமிகு கந்தையா இராஜமனோகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திருமிகு மேத்தா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக முன்னாள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு கதிர்காமு ஜெயகுமாரன் அவர்கள் வாழ்த்து மடல் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
நன்றியுரையினைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத் துணைப் பொறுப்பாளர் திருமிகு டக்ளஸ் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு நடைபெற்றது.

இறுதி நிகழ்வாக சேர்ஜி (Cergy) தமிழ்ச்சோலை மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை இசைத்தனர்.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எம்மினத்தின் குரலான பாடலை அனைவரும் சேர்ந்து பாடியதுடன் முத்தமிழ்விழா இனிதே நிறைவு பெற்றது.
.




























