சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பூர்வீக நாக தம்பிரான் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலை காலை நாகர் கோயில் கெளத்தம் துறை கடற்பகுதியில் இடம்பெற்றது.
அதிகாலை 4.15 மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நாகதம்பிரான் மற்றும் விநாயகப் பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் உள்வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அழகிய பூந்தண்டிகையில் மின்னொளி அலங்காரங்களுடன் முத்தெய்வங்களும் கடற்கரையை நோக்கிப் பக்தர்களால் தோள்களில் காவியவாறு அரோகரா எனும் கோஷத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது .ஏனைய ஆலயங்கள் வேறேங்குமில்லாதவாறு இவ்வாலய சமுத்திரத் தீர்த்தோற்சவத்திற்காக பூந்தண்டிகையில் முத்தெய்வங்களும் சுமார்-5 கிலோ மீற்றர் கடற்கரை வரையான தூரம் நடந்து செல்லாமல் ஓடிய காட்சி வேறெங்கும் காணாத தனிச் சிறப்பெனலாம்.
அதிகாலை 5 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்ட பூந்தண்டிகை ஊர்வலம் 5.30 மணிக்கு வீதிகள் இவயல் வெளிகள் ஊடாக கெளத்தம் துறை கடற்கரையைச் சென்றடைந்தது.அதனைத் தொடர்ந்து சூரிய உதயத்திற்கு முன்னதாக சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. சமுத்திரத் தீர்த்தோற்சவத்தைக் காண்பதற்காக ஆயிரக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் இதீர்த்தோற்சவத்தைத் தொடர்ந்து அடியவர்கள் கடலில் தீர்த்தமாடினர்.