பிரித்தாளும் ரணிலும், பிரிந்து நிற்கும் தமிழ் தேசியமும்!

0
178

”சமாதான பேச்சு  என்ற அஹிம்ஸை ஆயுதத்தின் மூலம்  விடுதலைப்புலிகளைப் பிரித்து அவர்களின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக ”வடக்கிற்கான தீர்வு”எனக்கூறி தமிழ் தேசியக் கட்சிகளையும் பிரிக்க முயற்சி”

விடுதலைப்புலிகள் ஆயுத, அரசியல், ஆட்பலத்தின் உச்சத்தில் இருந்தபோது ‘சமாதான பேச்சுவார்த்தை’ என்ற அஹிம்ஸை ஆயுதத்தின் மூலம் அவர்களைப் பிரித்து அவர்களின் அழிவுக்கு பிள்ளையார் சுழிபோட்ட அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க ,இன்று ஜனாதிபதியாக ”வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் தீர்வு.அதற்காக வடக்கு தமிழ் எம்.பி.க்களுடன் பேச்சு”என்ற அறிவிப்பின் மூலம் தமிழ் கட்சிகளையும் தமிழ் எம்.பி.க்களையும் பிரித்து  தமிழ் மக்களுக்கான தீர்வை அடியோடு இல்லாமல் செய்யும் சூழ்ச்சியை மீண்டும் கையிலெடுத்துள்ளாரா என்ற சந்தேகம் வலுப் பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னரான 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில் ஆட்சியில் இருந்த அரசுகளைப் பொறுத்தவரையில் நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினையாகவே கருதப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான  சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வடக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள்ளும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டினுள்ளும் வைத்திருந்த  தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப்புலிகளின் ”தனிநாடு”என்ற ஒரே கொள்கையால் அம்முயற்சிகள் தோற்றுப்போனமையும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரிக்கப்பட்டமையும்  வரலாறு.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர் அப்போது ஆட்சியிலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு வடக்கு,கிழக்கு மாகாணங்களை மட்டுமன்றி மக்களையும் பிரித்தாளும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. மஹிந்த ராஜபக்ச அரசே முதலில் ”கிழக்கின் உதயம்”,வடக்கின் வசந்தம்” என்ற அபிவிருத்தி திட்டங்களின் மூலம் அபிவிருத்திகளை மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் வடக்கிற்கு ஒருவகையாகவும் கிழக்கிற்கு இன்னொரு வகையாகவும் அணுகத் தொடங்கியதுடன், நாட்டில் வடக்கு மக்களுக்கு மட்டுமே சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அறிவித்தது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பிரிப்புக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் முதல் பெரும்பான்மையாக உள்ள தமிழ் மக்களையும் அடுத்த பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் மக்களையும் மோதவிடும் இனவாத ரீதியிலான தூண்டுதல் சூழ்ச்சிகளை செய்து கிழக்கில் தமிழ்-முஸ்லிம்களை இரு துருவங்களாக்கி வடக்கு,கிழக்கு மாகாணங்களை அரசு நினைத்தாலும் ஒற்றுமைப்படுத்த முடியாதளவுக்கு இன முரண்பாடுகளை மஹிந்த அரசு வளர்த்து விட்டது.வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பிரிப்புக்கு பின்னர் கிழக்கில் சிங்கள,முஸ்லிம் ஆக்கிரமிப்புகளினால் தமிழர்கள் ஆட்,புல ,அரசியல் ரீதியாக  பெரும் சரிவடையத் தொடங்கியதுடன் கிழக்கு மாகாணமும் தமிழர்களின் பிடியிலிருந்து நழுவியது.

”வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் கூறியது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினை என்று கூறினால்தான் சிங்களவர்களுக்கு அது புரியும்.அதனால்தான் அவர் அவ்வாறு கூறினார்.ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு போகும்போது வடக்கு,கிழக்கு எம்.பி.க்கள் இணைந்துதான் போவோம் என பூசி மெழுகும் தமிழ் தேசிய ரணில் விசுவாசிகள்”

இவ்வாறு மஹிந்த அரசு வடக்கு, கிழக்கையும் இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் எம்.பி.க்களையும் மக்களையும் பிரித்தாண்டு வந்த நிலையிலேயே தற்போது ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப்புலிகளை பிரித்து அழித்தது போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளையும் எம்.பி.க்களையும் பிரித்தாளும் சூழச்சியை மேற்கொண்டுள்ளார்.அந்த சூழ்ச்சிக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னுரையாகவே கோப்-27 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி கடந்த 10 ஆம் திகதி நாடு திரும்பியவுடன் , பாராளுமன்றத்தில்  ஆற்றிய விசேட உரை  அமைந்திருந்தது.அந்த உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தது இதுதான்,

”நாம் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.பயங்கரவாத தடுப்புச் சட்டம் ,உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் புதிய சட்டங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.ஜனவரி,பெப்ரவரி மாதமளவில் இரு அமைச்சர்களும் இதனை சமர்ப்பிக்க உள்ளனர்.வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரை விடுதலை செய்துள்ளோம்.மேலும் சிலர் விடுவிக்கப்படவேண்டியுள்ளனர்.எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு உள்ளது.வழக்கு நிறைவடைந்த பின்னர் அவர் தொடர்பிலும் செயற்படுவோம்.இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும்.

2019 இல் எமது ஆட்சி நிறைவடைகையில் காணாமல் போனோர் தொடர்பில் 65 கோப்புகள் தான் எஞ்சியிருந்தன. தற்பொழுது 2000 பேர் தொடர்பான விடயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேவையானால் மேலும் நபர்களை நியமித்து எஞ்சியவற்றையும் பூர்த்தி செய்ய முடியும்.அவற்றை துரிதமாக நிறைவு செய்யுமாறு நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.இவை தொடர்பில் எமக்கு மேலும் ஆராய முடியும்.இதற்கான ஒரே வழி விசாரணைகளுக்காக மேலும் பல குழுக்களை நியமிப்பதேயாகும். அது மட்டுமே இதற்குள்ள ஒரே தீர்வு.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வுகாணப்பட வேண்டும்.அடுத்த வாரமளவில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று உள்ளது.எனது நல்ல நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதில் பங்கெடுப்பார் என நினைக்கிறேன்.அவர் அதில் அரைவாசி வரை பயணித்தால் கூடபெரிய விடயமாக இருக்கும்.வடக்கிற்காக நாம் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டுள்ளோம்.அதற்கான மதிப்பீடுகளும் எம்மிடமுள்ளன.வடக்கில் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

திருகோணமலையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.இவை யாவும் இலங்கையர்களாகிய நமக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன.75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.யாரும் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த உரைதான் தற்போது மஹிந்த, கோத்தபாய வழியில் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கையும் கிழக்கையும் அங்குள்ள தமிழ் தேசியக் கட்சிகளையும் பிரித்தாள சூழ்ச்சி செய்கின்றாரா என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசுவாசிகளான அல்லது அவருக்கு விசுவாசமானவர்களின் விசுவாசிகளான ஒருசில  ஊடகங்கள்   ‘வடக்கு தமிழ் மக்கள்,வடக்கு தமிழ் எம்.பி.க்கள் ”என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அழுத்தி உரைத்துள்ள நிலையில், அதனை ஜனாதிபதி  ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ”தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- வடக்கு,கிழக்கு தமிழ் எம்.பிக்களை ஜனாதிபதி சந்திப்பார்” என ஜனாதிபதியின் அந்த ”வடக்கு மட்டும்”என்ற உரையின் பின்னாலுள்ள அரசியல் அல்லது சூழ்ச்சி தெரியாதவர்கள்போல அல்லது தெரிந்தும் ரணில் விசுவாசிகள் என்பதால் ஜனாதிபதி கிழக்கிற்கு விடாத அழைப்பை இந்த சில  ஊடகங்கள் விடுத்துள்ளன.

இந்த  ஊடகங்கள் மட்டுமன்றி தமிழ் தேசிய கட்சிகளில் உள்ள ரணில் விசுவாசிகள் அல்லது அபிமானிகளான சில தமிழ் எம்.பி.க்களும் ரணிலின் வடக்கிற்கான அழைப்பு தொடர்பில் மக்களுக்குள்ள   சந்தேகத்தை திசை  திருப்ப,ரணிலை தமிழ் மக்களின்  பாதுகாவலராக ,நண்பராக காட்ட ”வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் கூறியது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினை என்று கூறினால்தான் சிங்களவர்களுக்கு அது புரியும்.அதனால்தான் அவர் அவ்வாறு கூறினார்.ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு போகும்போது வடக்கு,கிழக்கு எம்.பி.க்கள் இணைந்துதான் போவோம்.வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்தான் பேசுவோம்”என ரணில் விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தவும் ரணிலின் அழைப்பு தொடர்பில் விசனமடைந்துள்ள சக எம்.பி.க்களை சமரசப்படுத்தவும் பூசி மெழுகுகின்றனர்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிச்சயம் கலந்து கொள்வார்.அவர் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படியான நிலையில் வடக்கு தமிழ் எம்.பி.க்களுக்கான சந்திப்பு என்று எவ்வாறு பிரித்துக்கூற முடியும்.எனவே இது வடக்கு,கிழக்கு தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பாகவே இருக்கும் எனவும்  சிலர் வாதிடுகின்றனர்.அதேநேரம்  வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வடக்கு தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி  நடத்தப்போவதாக கூறும் சந்திப்பில் திருமணத்துக்கு செல்லும் அழையா விருந்தாளிகள் போல் செல்வதற்கு அல்லது எங்களையும் அழைத்தார் எனக்கூறி அழையாமலே செல்வதற்கு  ஒரு சில கிழக்கு தமிழ்  எம்.பி.க்கள் தயாராகவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வடக்கிற்கான பேச்சுக்கான அழைப்பில், முரண்படக்கூடியவர், பேச்சுக்கு வர மறுக்கக்கூடியவரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ”தாஜா’ பண்ணும் வகையில் ”வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று உள்ளது. எனது நல்ல நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதில் பங்கெடுப்பார் என நினைக்கிறேன்.அவர் அதில் அரைவாசி வரை பயணித்தால் கூடபெரிய விடயமாக இருக்கும்” எனக் கூறியுள்ள நிலையில் இந்த வடக்கிற்கு மட்டுமான ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் அணியில் பெரிதாக எந்த சலசலப்பையும் காணமுடியவில்லை.

ஆனால்,இந்த வடக்கிற்கான சந்திப்பின் அழைப்பு தொடர்பில் தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தலைமையிலான பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் துணிச்சலுடனும் நேர்மையுடனும் ஜனாதிபதியின் வடக்கிற்கான அழைப்பை  கடுமையாக விமர்சித்துள்ளதுடன், கிழக்கு இல்லாத வடக்குடனான ஜனாதிபதியின் பேச்சு ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் அடித்துக்கூறியுள்ளது.அது உண்மையும் கூட.அதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்னொரு பங்காளிக்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான  தருமலிங்கம் சித்தார்த்தன்,”நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தான் அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.அதனை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு, ஆணைக்குழு அமைத்து நிதியை வீணடிக்காமல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்வைத்த ”பிராந்தியங்களின் ஒன்றியம் ” தீர்வுத்  திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம்.அரசும் விட்டுக் கொடுப்புடன்  செயற்பட வேண்டும்.”எனக்கூறி வழக்கமான தனது நழுவல் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது சமஷ்டியே தமிழர் அபிலாஷை’ என ஒரு குரலில் பேச வாருங்கள்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் விடுத்த அழைப்பையே  இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன .சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் மட்டுமே இந்த சந்திப்புக்கு  வந்திருந்தனர்.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட அங்கு சமுகம் தரவில்லை.

ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் இந்த சந்திப்பை புறக்கணித்ததன் காரணத்தை அறிந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன்  “கூட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அதன் தலைவராக நானே விடுத்தேன். என் சார்பில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் அதனை அனுப்பி வைத்தார். மாவை சேனாதிராஜா இந்தச் சமயத்தில் கொழும்பில் நிற்பார் என்பதால் அப்படி நேரம், திகதியை நானே தீர்மானித்தேன்.  ஆனால் கூட்டத்துக்கு யாரும் வரவில்லை.என் அழைப்பையும், எனது வீட்டில் சந்திப்பதையும் அவர்கள் விரும்பவில்லைப் போலும். அதுதான் நிலைமை என்றால் மாவை சேனாதிராஜாவே பொறுப்பெடுத்து ஏற்பாடு செய்து அழைக்கட்டும்.திகதி, நேரம், இடத்தைத் தீர்மானியுங்கள்.அங்கு நான் வருவேன்” என்று தெரிவித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

”வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-அதற்காக  வடக்கு தமிழ் எம்.பி.க்களுடன் பேச்சு” என்ற ஜனாதிபதியின் பிரித்தாளும் தந்திரம்  தொடர்பில்  மலையக தமிழ் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக்கூட வெளிப்படுத்தாத உயிரற்ற ஜடங்களாக தமிழ் தேசியக்கட்சிகள் உள்ளமை, ஜனாதிபதியின்  தந்திரத்தை வரவேற்கின்றமை தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின்போது ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையை வலியுறுத்துவது தொடர்பில் பேச தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. விடுத்த அழைப்பை ஒட்டுமொத்த தமிழ் தேசியக்கட்சிகளும் புறக்கணித்துள்ளமையும் தமிழ் மக்களை வெறுப்பேற்றியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்கு வடக்கு தமிழ் எம்.பிக்களுக்கான லயிப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள், சந்தேகங்கள் வலுப்பட்டுள்ள நிலையில், 2005 ஆம் ஆண்டு தேர்தலை விடுதலைப்புலிகளின் கோரிக்கையை ஏற்று வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்த நிலையில் அந்த தேர்தலில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்சவிடம் 180,786 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஜனாதிபதி பதவியை பெறமுடியது போன ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் எதிர்கட்சித்தலைவராக பாராளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் நினைவுபடுத்துவது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.அந்த உரையின் ஒரு பகுதி இதுதான்.

” இந்த ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டேன்.”ரணில் ஒரு நரி” எனக்கூறி தமிழ் மக்களை வாக்களிக்க விடாது புலிகள் என்னை தோற்கடித்தனர்.ஆனால் இங்கு சிலர் ”ரணில் ஒரு புலி”எனக்கூறி  சிங்களவர்களின் வாக்குகளை எனக்கு கிடைக்கவிடாது செய்தனர். புலிகள் என்னை புரிந்து கொண்ட அளவுக்கு சிங்கள மக்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை என்பதே எனக்குள்ள கவலை”

எனவே தமிழ் மக்கள் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க நரியா புலியா என்பதனை தமிழ் தேசியக்கட்சிகள்தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here