திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, ஈழத்தமிழர்கள் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இடுப்பின் கீழ் இயங்காது படுக்கையில் இருப்பவர். இவரது அன்றாட கடமைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்கு ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பல மனுக்கள் கொடுத்தும் உதவிக்கு ஒருவரை நியமிக்க அரசு சம்மதிக்கவில்லை.
அதனால் சுரேஷ்குமாருக்கு,உதவுவதற்கு யாரும் இல்லை. தற்காலிகமாவெனினும் ஒருவரை உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபொழுதும் அவருக்கு, பதில் எதுவும் வழங்க வில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கு விடவுமில்லை. இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று முகவும் ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவ மனைக்கு அனுப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, ஈழத் தமிழர்கள் 15 பேர்அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து,
அவர்களை விடுவிக்க வலியுறுத்திமகேஸ்வரன், தங்கவேல் உள்ளிட்ட 7 பேர் கடந்த மாதம் 4 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சிறப்பு முகாமில்இருந்து 2 பேர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து பெயரளவில் 2 பேரை மட்டும் அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என்றும், மற்றவர்களையும் உடனே விடுவிக்க வலியுறுத்தியும், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 11 ஈழத்தமிழர்கள், நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக இலங்கை அகதிகள் இவருக்குரிய அன்றாட கடமைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில் 01.10.2015 தொடக்கம் முகாமில் உள்ள அனைவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார்கள்.