பிரான்சு துலுஸ் மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்!

0
319

பிரான்சு Toulouse நகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றலுடன் மலர் வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈகைச்சுடரினை 06.03.2008 அன்று வீரச்சாவடைந்த லெப்.கலையொளி அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.


பிரான்சின் தென் பகுதியான துலுஸ் நகரமானது பிரான்சு தேசத்தின் முக்கிய இடமாகக் கருதப்படுகின்றது. இங்கு வாழும் தமிழீழ தேச மக்கள் தமது நாட்டின் விடுதலைக்கும், உன்னத வாழ்வுக்கும் தம்முயிரை கொடுத்த மாவீரர்களுக்கு அங்கு வாழுகின்ற பெற்றோர்கள், சகோதர உறவுகள் மக்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியாகவும் நினைவு கூரப்பட்டது.

மண்டபத்தின் மாவீரர் நுழைவாயிலில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கணேஸ் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழ மக்களின் உயிரினும்மேலான தமிழீழத் தேசியக்கொடியினை இளையவர்கள் கைகளில் ஏந்தி செல்ல அதன் பின்பாக மாவீரர் உறவுகள் , குழந்தைகள் பெரியவர்கள் அணிவகுத்து வர தமிழீழ தேசியக்கொடி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற்களப்பலியான லெப். சங்கர் அவர்களின் நினைவாக வடிவமைக்கப்பட்ட கல்லறையில் போர்த்தப்பட்டது. சரியாக 13.35 மணியோசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. முதற்சுடரினை லெப் கலையொளியின் சகோதரர் ஏற்றி வைக்க ஏனைய மாவீரர்களின் படங்களுக்கு உறவுகள் ஏற்றி வைத்தனர். கைக்குழந்தைகளும், பெரியவர்கள் வரை தமது மானமாவீரர்களுக்கு கண்ணீராலும், ஒளியாலும், மலராலும் வணக்கம் செலுத்தியிருந்தனர். தமது குழந்தைகளின் பிஞ்சுக்கரங்களால் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்களை சூட்டியிருந்தனர். மாணவமாணவியரின் மாவீரர் பாடல்களுக்கான நடனம், மாவீரர் பாடல்கள்,மாவீரர் பற்றிய பேச்சு, மாவீரர் நினைவுக் கவிதைகள், எழுச்சி நடனங்கள் போன்றன நடைபெற்றன. எழுச்சி நடனத்தில் எமது நடனக் குழந்தைகளுடன் பிரெஞ்சு மாணவர்களும் பங்குபற்றி நடனம் வழங்கியதோடு வாயில் பாடல் வரிகளை உச்சரித்து நடனம் வழங்கியிருந்தனர். இவற்றையெல்லாம் அங்குள்ள இயந்திரமயமான வாழ்வில் தாம் கற்ற கலைகளை தமது குழந்தைகளுக்கு பழக்கி மக்கள் முன் பெற்றோர்கள் காட்டியிருந்தனர். பழக்கிய பெற்றோர்களும் நடனத்தை வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பாரிசிலிருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் திரு. பாக்கியநாதன் அவர்களும், பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் மற்றும் இளையவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாவீரர் நினைவுரையை பரப்புரைப்பொறுப்பாளர் வழங்கியிருந்தார். தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களில் 13 வருடங்களுக்கு பிற்பாடு இந்த ஆண்டு பற்றியெரியும் தேசவிடுதலைத் தீயானது இனி வரும் காலங்களில் எந்த சக்தியாலும் இலகுவாக எரித்து விடமுடியாது என்றும், பிரான்சின் ஒரு பகுதியில் தென் திசைவாழும் துலுஸ் மக்கள் தாம் உண்டு தம்வேலையுண்டு என்று இருக்காது மாவீரர் மாதத்தினை கடந்தாலும் மனதால் அவர்கள் தம்முள் வாழ்கின்ற மாவீரர்களுக்கு வருடத்தில் ஒரு முறை அவர்களுக்காக எடுக்கின்ற இந்த நிகழ்வை இன்று நடாத்தி வரலாற்றில் பதிவாகிக் கொண்டுள்ள அதேவேளை பெரியவர்களான எம்மோடு நம்பிக்கையுடன் நிற்கும் எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு தேசத்தை பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும் என்றும், அதற்கான உயர்த்தியாகத்தை தமது கடமையாக எங்கள் பிள்ளைகள் மாவீரர்கள் செய்து காட்டியுள்ளனர் என்றும் இனி இங்கு, வாழும் எமது அடுத்த தலைமுறைக்கு தாய்மொழிக் கல்வியிலும், கலைபண்பாடு கலாசாரத்தோடும் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பு இங்குள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கத்திற்கு உண்டு என்றும் அதனையும், அதன் தமிழ்ச்சோலையையும் வலிமையானதாக மாற்றுவோம் என்று நாங்கள் ஒவ்வொரு தமிழர்களும் இந்த உன்னத மாவீரர்கள் முன்னிலையில் இதயபூர்வமாக சத்தியம் செய்து கொள்வோம் என்றும் அது தான் நாம் மாவீரர்களுக்கு உண்மையில் செய்யும் வணக்கமாகும் என்று கூறியிருந்தார்.
வரும் ஆண்டில் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள தமிழினப்படுகொலையின் சாட்சிகள் சேகரிப்புக்கும், தாயகத்தில் எம்மால் செய்யப்படவேண்டிய உதவிகளையும் செய்து எம்மைக் காத்தவர்களின் கரங்களை பலப்படுத்துவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம் நோக்கிய அத்தனை செயற்பாடுகளிலும் எமது மக்களும் எமது அடுத்த தலைமுறையும் வரலாறு படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் 2022 புதிதாக புனரமைக்கப்பட்ட சங்கத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் மேடைக்கு அழைத்து மக்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதில் ஒரு முக்கிய சம்பவமாக அந்த பிரதேசத்தில் வாழும் 70 வயதானவர் இலங்கை தேசத்திற்கு எவ்வாறு சிங்களவர் வந்தனர். இன்று வரை ஆங்கிலேயர்கள் எமக்கு செய்த இனப்பாகுபாடும் அதன் ஆவணங்களும் பலகாலம் சேகரித்த புத்தகங்களின் கட்டுரைகள், படங்கள் பொருட்கள் என்பவற்றைக் காட்டித் தனது காலத்தில் தமிழீழம் பெறவேண்டும் என்று கண்ணீர்விட்டுக் கதறினார். இன்றைய நாள் தனக்குக் கிடைத்த நன்நாள் என்றும் தான் சேகரித்த இந்தப் பொருட்கள் ஆவணங்கள் எல்லாம் தன்னோடு போய்விடுமோ என்று தான் வேதனைப்பட்டதாகவும், இன்று இந்த நிகழ்வில் அதனை கையளிப்பதால் தான் பெரும் சந்தோசமடைவதாகவும் கூறியிருந்தார். அவர் சேகரித்ததனை அத்தனை ஆவணங்களை துலுஸ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கணேஸ் அவர்கள் பொறுப்போற்றிருந்தார். துலுஸ் வாழ் மக்களுடன் அயல் நகரங்கள் உள்ள மக்களுமாக மண்டபம் நிறைந்த மக்களாக காணப்பட்டனர்.
வெளியீட்டுப்பிரிவினால் வைக்கப்பட்ட தேசியம் நோக்கிய அனைத்து வெளியீடுகளும் மக்களால் வாங்கிச்செல்லப்பட்டன. பல தமக்கு கிடைக்காமல் தமக்கு பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர். இந்தப் பகுதியில் வாழும் மக்களின் தேசம் நோக்கிய விடுதலை உணர்வும், செயற்பாடுகளும் வயது வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் தமது மாவீரர்களுக்கும், மண்ணுக்கும், மொழிக்கும் தமது கடமையைச் செய்திருந்தனர். பங்குபற்றிய அனைத்து கலைக்குழந்தைகளுடன் தமிழீழத் தேசியக் கொடியை அசைத்து நம்புங்கள் தமிழீழம் பாடலைப்பாடி எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் உச்சரித்து உணர்ச்சிகளுடன் ஆரம்பித்த இப்புனிதநாள் நிகழ்வு எழுச்சியோடு நிறைவு கண்டது.
(ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here