முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது துயிலும் இல்லமான கோடாலிகல் துயிலுமில்லத்தில் 27/11/2022 அன்று மிக எழுச்சி பூர்வமாக மாவீரர்நாள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேஜர் ஞானவேலின் தந்தையார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். அவரை தொடர்ந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என அனைவரும் விளக்கேற்றினர்.
இங்கே விதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கென தமிழீழத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகளிலும், உழவு இயந்திரங்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் என பல்வேறுபட்ட போக்குவரத்து ஊடாக அங்கே வருகை தந்திருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் இத் துயிலும் இல்லம் அமைந்துள்ளமையினால் பேருந்து மூலமாக வரவழைக்கப்பட்ட மக்கள் உழவு இயந்திரங்கள் மூலமாகவும் காட்டுப்பாதையில் செல்லக்கூடிய ஏனைய வாகனங்கள் மூலமாகவும் துயிலுமில்லம் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு சிற்றுண்டிகளும் நீராகாரங்களும் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அங்கே வந்த உறவுகளுக்கு அவர்களின் மாவீரர்களின் நினைவாக தென்னம்பிள்ளைகளும் வழங்கப்படது.
இவ் வருடம் பல எண்ணிக்கையிலான உறவுகள் மிக எழுச்சியுடன் மாவீரர்நாளில் கலந்துகொண்டு மாவீரர்களான தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய மனநிறைவுடன் அவர்கள் எவ்வாறு வருகை தந்தனரோ அதே போன்று அங்கிருந்து சென்றனர். அதற்குரிய போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.
இந்த வருடம் அதாவது 2022ம் ஆண்டு இத் துயிலுமில்லத்துக்கென ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதாயான மின் ஆக்கி (Generator) வழங்கப்பட்டது. அதற்கு தேவையான 2 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டன.