சீரற்ற வானிலை காரணமாக சுமார் 19,000 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
சீரற்ற வானிலையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
குறித்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதுடன் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களினூடாக உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அவசர நிலைமையின் போது 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்று கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.