தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு புறநகர் பகுதியான நெவரில் நெவர் பிராங்கோ தமிழ்ச்சங்கம், நெவர் தமிழ்ச்சோலையின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 58மாவட்டத்தின் maison de dioscése பகுதியில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பகல் 13:00 மணிக்கு பொதுச்சுடரினை வர்த்தக முகமையாளர் ஆறுமுகம் ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க,
தொடர்ந்து பிரெஞ்சு தேசியக்கொடியினை நெவர்வாழ் பங்குத்தந்தை Jaen Ballier அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினரும், நெவர் தமிழ்ச்சோலை ஆசிரியருமான யேசுதாசன் ஜெயந்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை மணலாற்றில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை டென்சியாவின் சகோதரர் ஏற்றிவைக்க லெப்டினன் சங்கரின் திரவுருவப்படத்துக்கு யேசுதாசன் குமார் மலர்வணக்கம் செலுத்த மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு பொது மக்கள் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், மாவீரர்நாள் 2022ன் கலைத்திறன் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் எழுச்சி நடனங்கள், எழுச்சிப்பாட்டுக்கள் ,பேச்சுக்கள் இடம்பெற்றன.
நெவர் வாழ் பங்குத்த்தை Jaen Ballier அவர்கள் மாவீரர்கள் பற்றி உரையாற்றினார்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் சத்தியதாசன் அவர்கள்
சமகாலத்தின் சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலை பற்றியும், புலம்பெயர்ந்த தேசத்தில் நம்இனத்தின் விடுதலைக்காக நாம் முன்னெடுக்க வேண்டிய அரசியல் தொடர்பாகவும் சிறப்புரையாற்றினார்.
17.00 மணியளவில் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.