யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்களில் 18-25 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களே ஈடுபட்டு வருகின்றனர்.எனவே ,தமது பிள்ளைகளது நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வூட்லர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (29.9.2015) காலை ஊடகங்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழில் சமூக விரோத மற்றும் சட்ட விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன .இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கமைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பலரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளோம்.குறிப்பாக யாழ்.நகரில் பொலிஸ் காவல் நிலையமொன்றை அமைத்து நகரில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.அதே போன்று சிவில் உடையிலும் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை மாணவர்கள் முதல் பல தரப்பினர்களையும் இணைத்துப் பல்வேறு மட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம் இதற்கமையவே கொக்குவில் பகுதியில் ரவுடிக் கும்பல் ஒன்றையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளோம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.எனவே அவர்களுடைய பெற்றோர்களும் ,உறவினர்களும் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவதானம் செலுத்த வேண்டும்.அப்போது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகின்ற போது உடனடியாகவே அதனைத் தடுத்த முடியும்.
சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.