பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில், பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சாந்திகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார். திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 15.03.1992 மன்னார் கடற்பரப்பி;ல் வீரச்சாவடைந்த 2ம் லெப். காளிதாஸ், 25.06.1992 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தமிழ்நெஞ்சன் ஆகியோரின் சகோதரன் ஏற்றிவைக்க மலர்மாலையை 02.09.1999 அன்று யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்த திருஅம்மான், 01.03.1994 அன்று யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்த லெப்.மயூரன் ஆகியோரின் சகோதரன் அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றன.
மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர் மேடையில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில், மாவீரர்களின் ஈகம் பற்றியும் அந்த மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் மதிப்பளிப்புச் செய்யப்படவேண்டிய அவசியம் பற்றியதாகவும் அவருடைய உரை அமைந்திருந்தது.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் உணர்வுபொங்க கைகளைத் தட்டி நின்றனர்.
தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு — ஊடகப்பிரிவு)