சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் நேற்று (01.11.2022) செவ்வாய் க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.
பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கப்டன் பரதா , லெப். பக்கி ஆகிய மாவீரர்களின் சகோதரர், கேணல் பரிதி அவர்களின் தாயார் ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் திருஉருவச்சிலைக்கும் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப் படத்திற்கும் இரண்டு மாவீரர்களின் சகோதரர் மலர்மாலை அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
லாக்கூர்நோவ் நகரபிதா , பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் லாக்கூர்நோவ் மாகரசபையின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.