யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் (30.10.2024) 29 வருடங்களாகின்றன. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அதாவது இதேபோன்ற ஒரு நாளில் இரவோடிரவாக அம்மக்கள் வெளியேறிய சந்தர்ப்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
சந்திரிகா குமாரதுங்க அவர்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டினை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்முகமாக பலாலி மற்றும் அச்சுவேலியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ‘ரிவிரெச’ என்ற சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையினால், வலிகாமம் வாழ் மக்கள் தமது சொத்துக்கள், உடைமைகள் அத்தனையையும் விட்டுவிட்டு தம்மை காப்பாற்றிக்கொள்ளும் முகமாக ஒரே இரவில் வெளியேறினர்.
கடுமையான ஷெல் தாக்குதல்கள் குடாநாட்டினை அதிர வைத்துக்கொண்டிருந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு பின்னராக, மக்களை தமது வீடுகளில் இருந்து வெளியேறி தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வன்னிப்பகுதிகளுக்குச் செல்லுமாறு விடுதலைப் புலிகளால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
அறிவித்தல் விடுக்கப்பட்ட அடுத்த வினாடியே செய்வதறியாது தவித்த மக்கள் தமது சொத்துக்கள், உடைமைகள், தாம் வளர்த்த செல்லப்பிராணிகள், கால்நடைகள் என சகலவற்றையும் விட்டுவிட்டு, தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் செம்மணியூடாக அங்குலம் அங்குலமாக நகர்ந்து சென்றனர்.கடுமையான மழைக்கும் வெள்ளத்துக்கும் மத்தியில் சிக்கித் தவித்த மக்களில், வயோதிபர்கள் மற்றும் சில நோய்வாய்ப்பட்டவர்கள் செம்மணி வீதியிலேயே மரணத்தை தழுவிக்கொண்டனர்.
உயிர்பிழைத்தவர்கள் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வன்னிப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஈழத்து தமிழினத்தின் வரலாற்றில் மிகப் பெரும் அவலமும் இடப்பெயர்வும் நடந்த வரலாறாக இந்தச் சம்பவம் பதிவாகியது.