இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி பாம்பன் ரயில் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவம், அப்போதைய அதிபர் ராஜபட்ச, கோத்தபய ராஜபட்ச, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்பட போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தில் சிவகங்கை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் சரவணண், அரவிந்தன், காளிஸ்வரன், கதிரவன் ஆகிய ஐந்து பேர் கட்சியின் கொடியுடன் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.15 மணியளவில் பாம்பன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட்டோர்களை பாம்பன் காவல்துறையினர் கைது செய்யப்பட்டதும் அரை மணி நேரம் தாமதமாக பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.