கிணற்று நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ள அனைத்துப் பகுதிகளையும் அனர்த்த பகுதிகளாக பிரகடனப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்னசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் தெல்லிப்பழை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர். அந்த மனுவில், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் இதுவரை 700 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி நிலத்தடி நீரில் கனத்த உலோகங்கள் அடங்கிய கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட நீர் பரிசோதனை பெறுபேறுகளின் முழு விபரங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்து கிணறுகளின் நீரும் துரிதமாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீர் மாதிரிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பிரதேச செயலகத்திடம் முன்வைத்துள்ளனர்.