தமிழ் ஆசிரியர்களை மெருகேற்றிய ஆசிரியர் செயலமர்வு!
பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, 02.10.2022 அன்று கொலோம்ப் நகரில், கொலோம்ப் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
முதல்த் தொகுதியான மழலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரையான செயலமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. நாகஜோதிஸ்வரன் தலைமையில் அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வானது மாலை 17.30 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் நிறைவடைந்தது.
வரவேற்புரையை செயலாளர் திரு. காணிக்கைநாதன் வழங்கியிருந்தார்.
தமிழ் ஆசிரியர்களால் மண்டபம் நிறைந்திருக்க, 8 ஆசிரியப் பயிற்றுநர்கள் பயிற்றுரையை வழங்கினர்.
ஆசிரியவாண்மையை திருவாட்டி கமலாவதி கைலாயபிள்ளை அவர்களும், கட்டுரை அமைத்தல் நுட்பம் தொடர்பாக திருவாட்டி ஜெயராணி புஸ்பகுணபாலசிங்கம் அவர்களும், நயம்கொண்ட தமிழ் இலக்கியங்கள் எனும் தலைப்பில் திருவாட்டி உதயராணி திருச்செல்வம் அவர்களும், அடிப்படை இலக்கணப்பகுதியை திருவாட்டி தயாபரி கண்ணதாசன் அவர்களும், கற்பித்தலில் புதிய தொழில் நுட்பம் எனும் தலைப்பில் கலாநிதி சிவஞானம் தனராஜா அவர்களும், வரலாற்றுப் பகுதியை திருமிகு கிருஸ்ணபிள்ளை தவராசா அவர்களும், கற்பித்தலில் உளவியல் உத்திகள் எனும் தலைப்பில் திருவாட்டி கவிதா ஆடியபாதம் அவர்களும், நிகழ்கால வரலாறு பற்றி திருமிகு வினாசித்தம்பி மோகனதாசன் அவர்களும் பயிற்றுரைகளை வழங்கியிருந்தனர்.
உணவு இடைவேளையைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்திறனூடு ஆசிரியர்களின் வாண்மையை மேம்படுத்தும் நோக்கில் இணைய வழித்தேர்வும் இம்முறை புதிதாக ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வமர்வில் இளந்தலைமுறை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நிகழ்ச்சிகளை தமிழ் இணைய கல்விக்கழகப் பேராசிரியர் திரு.சி. தனராஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பினை தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக்கல்வியின் இளந்தலைமுறை மாணவர்களே முன்நின்று செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தொகுதி ஆசிரியர்களான வளர்தமிழ் 6 தொடக்கம் 12 வரையான ஆசிரியர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 23.10.2022 அன்று இதே மண்டபத்தில் நடைபெறும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
.