சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத்; தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 26.09.2022 திங்கள் அன்று சூரிச் மாநிலத்தில்; எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் சூரிச் வாழ் இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டன.
இவ்வெழுச்சி நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், எழுச்சி நடனங்களுடன் காலத்திற்கேற்ப சிறப்புரையும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலினைத் தொடரந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.