தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (25.09.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார்.
பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் விமல்ராஜ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. ராஜ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் ராஜ்மோகன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த எழுச்சி நடனத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அரங்க நிகழ்வுகள், பேச்சு, கவிதை, எழுச்சி கானங்கள் என்பன உணர்வெழுச்சியோடு இடம்பெற்றன.
நிறைவாகத் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்த பின்னர் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)