பிரான்சு ஆர்ஜொன்தை பகுதியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு நேற்று 26.09.2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் அடையாள உண்ணாநோன்புடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொன்தை பிராங்கோ தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் மாவீரர் கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி உண்ணா நோன்பை ஆரம்பித்து வைத்தனர். மூதாளர் அவையைச் சார்ந்த திரு. கிருபை நடராசா அவர்கள் மலர்வணக்கம் செலுத்தியதுடன் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.
உண்ணாநோன்பைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில், அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. முன்னதாக தமிழீழத் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தேசியக்கொடியினை, பிரான்சு இளையோர் அமைப்பு உறுப்பினர் அர்ச்சுனன் ஏற்றிவைத்தார். பொதுச்சுடரினை ஆர்ஜொன்தை தமிழ்ச்சோலை மாணவ பிரதிநிதி ஞானசீலன் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 17.09.200 அன்று வீரச்சாவடைந்த ஊடகப்போராளி மலரினி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் திரு உருவப் படங்களுக்கான சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகை தந்த இனமான இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்தார்.
அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர். ஆர்ஜொன்தை நகரபிதா மற்றும் உறுப்பினர்கள் மலர்வணக்கம் செலுத்தி உரைநிகழ்த்தினர்.a href=”http://www.errimalai.com/wp-content/uploads/2015/09/DSCN1013.jpg”>
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆர்ஜொன்தை தமிழ்ச்சோலை, சேர்ஜி 1, 2 தமிழ்சோலை, இவிறி சூசென் தமிழ்சோலை, கொலம்பஸ் தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. லுபுசே தமிழ்சோலை மாணவி செல்வி ஜீவகுமார் மதுமிதா, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவன் செல்வன் ஜோசெப் அன்றூ ஆகியோர் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றி உரை நிகழ்த்தினர். ஆர்ஜொன்தை தமிழ்ச்சோலை மாணவர்களான செல்வன் நிமலராஜா வினோஜன், செல்வி மாணிக்கராஜா பாரதி ஆகியோர் தியாகதீபம் திலீபன் தொடர்பான கவிதை வாசித்தனர். ஆர்ஜொன்தை தமிழ்ச்சோலை மாணவர்களின் சுரத்தட்டு வாத்திய இசை சிறப்பாக இருந்தது. லுபுசே தமிழ்ச்சோலை மாணவர்களின் சிறு நாடகமும் இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வாக இனமான இயக்குநர் திரு.வ.கௌதமன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பற்றியதாக அவரது உரை அமைந்திருந்தது.
வானத்தில் இருந்து திலீபன் சொல்கிறான் போரை விடாதே….! என்பதாய் அவருடைய பேச்சு நிறைவடைந்தது.
<
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் பாலசுந்தரம் அவர்களது உரையும் இடம்பெற்றது.
நிறைவாக அடையாள உண்ணா நோன்பு இருந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.
அடுத்து அறிவிப்பாளர் வினோத் நாம் தொடர்ந்து உறுதியாகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்தி வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார்.
நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி இறக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். குறித்த பகுதியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 15.09.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ஜொன்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 12 நாட்களும் காலை 10 மணிக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.