குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : பலர் கைதாகி நீதிமன்றங்களில் ஆஜர்!

0
192

court11441யாழ். மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர்.

சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டு நடத்திய சம்பவத்தையடுத்து, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நீதிமன்றச் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்க முற்பட்டிருக்கின்ற ரவுடிகளுக்கும், ரவுடி கும்பல்களுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரை அழைத்து நேரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினரை அமர்த்தி தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிககைகள் சுன்னாகம் மற்றும் அதனைச் சூழ்ந்த விரதேசங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேநேரம் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலைய பிரதேசங்களிலும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடந்த ஒரு வாரத்தில் அந்தந்த பொலிஸ் நிலைய பிரிவுகளில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள  நடவடிக்கைகள் குறித்து மேல் நீதிமன்றத்திற்கு நேரடியாக ஆஜராகி முன்னேற்ற நிலைமைகள் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்திருந்த உத்தரவுக்கமையவே நீதிபதியிடம் பொலிஸ் அதிகாரிகள் இதனைத் தெரவித்துள்ளனர்.

சுன்னாகம்

கடந்த ஒரு வாரத்தில் யாழ். நகரம் மற்றும் கொக்குவில் சுன்னாகம் பொலிஸ் பகுதிகளில் நடைபெற்ற வாள்வெட்டுக்கள், தெரு ரவுடித்தனங்களை விசேட அதிரடிப்படையின் துணைகொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் பின்னர் தலைமiறைவாகியுள்ள சந்தேக நபர்களைக் கைது செய்ய தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி அறிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் வாள்வெட்டு குற்றச செயல் நடைபெற்றபோது,  மனைவியின் சுகவீனம் காரணமாக தான் விடுமுறையில் நின்றதாகவும் சம்பவம் நடைபெற்றதை அறிந்ததும்,உடனடியாக கடமைக்குத் திரும்பி குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலப்பகுதியில் சுன்னாகம் பிரதேசத்தில் எதுவித குற்றச்செயல்களும், நடைபெறாவண்ணம் கவனிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், குற்றச் செயல்கள் புரிந்தவர்கள், புரிபவர்கள் என சந்தேகிக்கப்படும் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து இரவு பகல் பாராமல் விசாரணைகள் மேற்கொள்வதாகவும் முக்கிய சூத்திரதாரிகள் தலைமறைவாகியுள்ளதால், விசேட அதிரடிப்படையின் உதவியுடன் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விடுமுறையில் இருப்பதனால், அவருக்காக, பதில் கடமையாற்றும் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, யாழ். குடாநாட்டு குற்றச் செயல்கள் மிக விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் குற்றச்செயல்கள் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு அந்தந்த மன்றுகளில் ஆஜர் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதியிடம் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிபதி முன்னிலையில் ஆஜராகிய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொக்குவிலில் நடைபெற்ற வாள்வெட்டு தனிப்பட்ட பகை காரணமாகவே இடம்பெற்றதாகவும் எதிரி அடையாளம் காணப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ் நகரப் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் ஹீரோ வீடுகளில் ஸீரோ

இதனையடுத்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது:

பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மாணவிகளின் பின்னால் மாணவர்கள் கூக்குரலிட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செல்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் இளைஞர்கள் சந்திகளிலும், மதகுகளில் கூடிநின்று கும்மாளம் அடிக்கும் செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசேடமாக  தனியார் நிறுவனங்களின் முன்னால் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் மாணவிகளிடம் சில்மிசம் செய்யும் இளைஞர்ளையும்,தனியார் நிறுவனங்களின் முன்னால் கூடி காதல் விவகாரம் என, மாணவிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிச் செல்பவர்களையும், அவர்களுடன் கோஸ்டியாக மோதல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும்.

விசேடமாக யாழ். நகரப்பகுதிகளில் கூட்டமாக கூக்குரலிட்டு மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பவனி வருவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகள், யுவதிகள் பொதுமக்கள் அச்சமடைய நேரிட்டுள்ளது. வீதிகளில் கூட்டமாக மோட்டார் சைக்கிள்களில் வெட்டி வெட்டி வேகமாக ஓடுவதனால், வாகன போக்குவரத்துக்கும் பொதுமக்களின் போக்கவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுகின்றது. இவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்ய பொலிசார் தயங்கக் கூடாது. இவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலையில்லாமல் வெட்டியாக மோட்டார் சைக்கிள்களில் திரியும் இளைஞர்களிடம் ஒரு மோட்டார் சைக்கள், ஒரு கைத்தொலைபேசி, கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி என்பனவே அவர்களின் சொத்தாக உள்ளது. இவைகள் மூன்றும் வெளிநாடுகளில் இரவு பகல் பாராது உழைக்கும்  உறவுகளின் வியர்வை சிந்திய சம்பாத்தியத்தில் பெறப்பட்டவை.

ஆனால் இவர்கள் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் தேவையில்லாமல் ஓடித்திரிகையில் தங்களை ஹீரோவாக கற்பனை செய்து கொள்கின்றார்கள். தொழில் இல்லாததால், வீட்டில் இவர்களின் நிலைமை ஸீரோ. இதன் வெளிப்பாடாகவே அவர்கள் 10 அல்லது 15 மோட்டார் சைக்கிள்களில் கூட்டமாக பாடசாலை விடும் நேரம், டியூட்டரிகளுக்கு மாணவிகள் செல்லும் நேரங்களில் வீதிகளில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் ஓடித்திரிகின்றார்கள். இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.  இவர்களைக் கைது செய்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தாலே யாழ் நகரத்தின் 90 வீதமான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஊர்காவற்றுறை

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிபதி முன்னால் ஆஜராகி, அந்தப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விளக்கமளித்தபோது, வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி போன்ற பகுதிகளில் கடல் மண் களவாக ஏற்றிச் செல்வது அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதுடன்,  அவர்களுடைய வாகனங்களையும் கைப்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்தப் பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் சட்டத்திற்கு முரணான வகையில் கடத்தப்பட்டு, பொது இடங்களில் வைத்து வெட்டப்படுகின்றன. இவ்வாறு வெட்டப்பட்ட மாடுகளின எலும்புக் கூடுகள் காணப்படும் புகைப்படங்களை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுபவர்களின் பெயர் விபரங்களையும் நீதிபதி அவரிடம் வழங்கியுள்ளார்.

வாள்வெட்டு ரவுடிக் குழுவின் தலைவர் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவராம்

நீதிபதியின் முன்னிலையில் ஆஜராகிய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகவல் தெரிவிக்கையில், வாள்வெட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற குழுவின் தலைவர் தனது பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது வெளிமாவட்டம் ஒன்றில் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பிரதேசம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிபதி முன்னிலையில் ஆஜராகியபோது, கோப்பாய் பகுதியில் தற்போது 90 வீதம் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தலையெடுக்காத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் குற்றச்செயல்கள் இடம்பெற்றால், அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகியபோது, யாழ் குடாநாடு அமைதியாக இருக்க வேண்டும். குறறச் செயல்கள் இருக்கக் கூடாது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இதுதான் பொலிசாருக்குரிய பெருமை தரத்தக்க விடயம். பொலிசாரின் கௌரவத்தைக் கெடுத்து நீதிமன்ற ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களுக்கு எதிராக தாமதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்;. வேண்டும் என பொறுப்பதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

யாழ். மாவட்டத்தில் ரவுடிகள் தெருச் சண்டியர்கள் வாள்வெட்டுக்காரர்களைக் கைது செய்து குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு மேல் நீதிமன்றம் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகக் கட்டளை பிறப்பித்ததையடுத்து, மாவட்டத்தின் பல இடங்களிலும் பொலிசார் தீவிரமாகச் செயற்படுவதாகவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் அவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதைக் காண முடிகின்றது என ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here