இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு பிரிவினரால் குறித்த மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா குறிப்பிட்டுள்ளார்.
காரைத்தீவுக்கு வடக்கு கடற்பகுதியிலேயே இந்திய மீனவர்கள் ஆறு பேரும் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிமனை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரமேஷ்கண்ணா குறிப்பிட்டார்.
இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னர் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.