தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு -2022
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப் படும் தமிழ் இணையப்பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை அமர்வானது, *ஆறாவது ஆண்டாக * 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை, அன்று புளோமெனில் தமிழ்ச்சங்க ஆதரவுடன் புளோமெனில் நகரில் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினராக சுவிசு நாட்டிலிருந்து எழுத்தாளரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திருவாட்டி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழாசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அவை நிறைந்திருந்தது.
மங்கல விளக்கேற்றலுடன் சரியாக 13.01 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் என்பன வழமை போல நடைபெற்ற நிகழ்வில், 7 பட்டகர்கள் தங்களது கட்டுரைகளை ஒப்பளிப்புச் செய்தனர். பட்டப்படிப்பு மாணவிகள் மற்றும் புளோமெனில் மாணவிகளின் நடனங்களும் நிகழ்வில் இடம்பெற்றது.
பட்டப்படிப்பின் நிறைவுப் பகுதியாக பட்டகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் ஆண்டு தோறும் ஒப்பளிப்பது வழக்கம்.
தமிழ் மொழி, இலக்கியம், தமிழர் வாழ்வியல் சமகாலத் தமிழ்த் தேசிய நிலைப்பாடு,பெண்ணியல், போர்க்கால இலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் இவ்வாய்வுகள் மேற்கொண்டுள்ளன.
*இவ்வாய்வுக்கட்டுரைகள் தமிழ், பிரெஞ்சு என இருமொழிகளில் நூலாக வெளியிடப்பட்டும் வருகின்றது.
ஆய்வாளர்களிடம், அவையோர் கேள்விகளைக் கேட்கக்கூடிய தொழில்நுட்ப முறைமை இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல கட்டுரை பற்றிய கேள்விகளும் அவையோரிடம் கேட்கப்பட்டன. அவையோரின் கேள்விகளுக்கு ஆய்வாளர்களின் விடைகளும் மேடையிலே உடனுக்குடன் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நடுவே *எழுத்தாளர் திருவாட்டி ஆதிலட்சுமியின் *
*’ பொன் வண்டு’ * என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
நூல் *அணிந்துரையை திரு. பாஸ்கரன் * அவர்கள் வழங்கியிருந்தார்.
தமிழைப் போற்றி தமிழ் பற்றி அறிந்து கொள்ளும் நல்லதொரு மாலைப் பொழுதாக அமைந்த இன்றைய மாலைப்பொழுது நிகழ்வானது, பிற்பகல் 7 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே நிறைவுபெற்றது.
.