ஜெனீவாவில் 51வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முருகதாசன் நினைவுத் திடல் முன்பாக ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கவனயீர்ப்புப் போராட்டமானது பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
9.09.2022 திங்கள் அன்று பிற்பகல் 14:15 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணமிருந்தனர்.
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்கள் ஆகுதியாகிய இடத்திலிருந்து தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் பதித்த பீடத்தினை உணர்வாளர்கள் கைகளில் தாங்கியவாறு முன்செல்ல, அதன் பின்னால் மக்கள் அணிவகுத்து மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற கோசத்துடன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் ஆகுதியாகிய இடத்தில் அமைக்கப்பட்ட அரங்கினை நோக்கி எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்;மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.