9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது.
கடந்த 02/09/2022 நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் மனித நேய ஈருருளிப்பயணம் எழுச்சிகரமாக ஆரம்பமானது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணை ஆரம்பிக்க வேண்டும், தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழமே தீர்வு… எனும் கோரிக்கைகளோடு 25ம் தடவைகளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தமிழீழ மக்களின் வேணவாவினை வையம் எங்கும் இடித்துரைக்கின்றது. 9 ம் நாளாக (10/09/2022) தொடரும் இப்போராட்டாம் மூன்று நாடுகளை கடந்து யேர்மனி சார்புருக்கன் அரசியற் சந்திப்புக்களைத் தொடர்ந்து சார்குமின் மாநகர சந்திப்புக்களையும் மேற்கொண்டு மீண்டும் யேர்மனியில் பயணிக்கின்றது. ஐக்கிய நாடுகள் அவையின் 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழினவழிப்பு சார்ந்த பொறுப்புக்கூறல்கள் தீவிரமான முறையில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் தமிழர்களின் தொடர் அறவழிப்போராட்டங்களின் மூலமே சர்வதேசத்தின் முழு அழுத்தங்களையும் பிரயோகித்துக்கொண்டிருக்கின்றன.