தமிழீழ தேச மாவீரர்நாள் தாய்நிலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் ஆண்டு தோறும் எழுச்சிபூர்வமாக நவம்பர் 27 ஆம் நாள் நினைவு கூரப்பட்டு வருகின்றன. அதற்கான பொருளாதரம், மற்றும் அனைத்து வழியிலான பங்களிப்பினை எமது மக்களே தொடர்ந்து செய்துவருகின்றனர்.
அந்த வகையில் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் தேசிய மாவீரர்நாள் பங்களிப்பு அட்டை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை லெப். பக்கி, கப்டன் சுதா ஆகிய இருமாவீரர்களின் சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பங்களிப்பு அட்டையை 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர் வழங்க தமிழ்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் அவர்களும், மற்றும் கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ்சங்கத்தலைவர்கள், ஆதரவாளர் பெற்றுக்கொண்டதோடு தமது பங்களிப்பையும் வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையும், மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவும் செய்திருந்தனர்.