சிறப்பு செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 4ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் By Admin - September 6, 2022 0 120 Share on Facebook Tweet on Twitter 4ம் நாளாக (05/09/2022) தொடரும் அறவழிப்போராட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது. எழுச்சி கொண்ட இனத்தினை எந்த அடக்குமுறைகளாலும் நசுக்கிவிட முடியாது, அதற்கான எடுத்துக்காட்டாகத்தான் தமிழ் மக்களின் போராட்டங்களும் பேரெழுச்சி கொண்டு அறவழிப்போராட்டமாக தொடர்கின்றது. தமிழ் இனத்தின் மீது சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு கட்டவிழ்த்து விட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களின் பூர்வகுடி நிலமான தமிழீழத்தின் விடுதலையினையும் வேண்டி 25ம் தடவையாக ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்கின்றது. 4ம் நாளாக (05/09/2022) நெதர்லாந்து நாடு கடந்து பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலை வந்தடையும் வழியில் அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியான மாவீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பெல்சிய வெளிநாட்டமைச்சு , ஐரோப்பிய ஒன்றியம், தெற்காசிய பசுபிக் பிராந்தியத்தின் பொறுப்பதிகாரிகளை இணைய வழியில் சந்தித்தார்கள். சிறிலங்காப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றக் கூண்டில் நிறுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதனையும் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளும் அச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வாவ்ர் மாநகரசபை முதல்வரினையும் சந்தித்து கலந்துரையாடி ஊடகங்களின் முக்கியத்துவம் சார்ந்தும் மேலதிகமாக பேசப்பட்டு அதற்கான ஆவனவாக தான் பெல்சிய நாட்டு வெளிநாட்டமைச்சுக்கும் ஊடங்களுக்கும் தகவற்பரிமாற்றத்தினை மேற்கொள்வதாக தெரிவித்தார். “விடுதலைத் தாகத்தோடு பயணிக்கும் நீங்கள் போராளிகள்” எனவும் மேற்கோள்காட்டி அறவழிப்போராட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார் என்பது கவனிக்கத்தக்கது. “மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” – தியாக தீபம் லெப் கேணல் திலீபன்-