1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேர் குறித்தும் அதன்பின்னர் கைது செய்யப்பட்ட 26 பேர் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்ட “வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்களே இம்மாவட்டத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய கைதிகளை கொண்ட குழுவாகும். இக் கைதுகள் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 மற்றம் 23 திகதிகளில் நடைபெற்றன.
முதலாம் நாள் 158 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டாம் நாள் 16 பேர் சிறையில் வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் என கருதப்பட்ட 158 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இவ்வாணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட 158 பேரில் 92 பேர் காணாமல் போனதை 83 சாட்சிகள் நிறுபித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கைதில் காணாமல் போன 16 பேரில் 10 பேருக்கான சாட்சியங்களும் கொடுக்கப்பட்டன.
சாட்சிகளின் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டு யூலை மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 45000 மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவ் அகதிமுகாமானது பேராசிரியர் மனோ சபாரெட்ணம் டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் திரு.வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அந்தக்காலப்பகுதியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஆதரவும் வழங்கப்பட்டது.
1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி காலை 6மணிக்கு கொம்மாதுரை இராணுவமுகாமில் இருந்த இராணுவத்தினர் வேறு சில முகாமில் இருந்த இராணுவத்தினருடன் இ.போ.ச பஸ்வண்டியில் கிழக்குப் பல்கலைக்கழக வளவினுள் நுழைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளைவான் வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் அகதிகள் அனைவரும் மூன்று வெவ்வேறு வரிசையில் நிற்குமாறு வேண்டப்பட்டனர்.
12 லிருந்து 25 வயதுவரையானோர் முதலாவது வரிசையிலும், 26 இல் இருந்து 40 வயதானோர் இரண்டாவது வரிசையிலும், 40 வயதிற்கு மேற்பட்டோர் மூன்றாவது வரிசையிலும் நிற்குமாறு வேண்டப்பட்டதுடன் இம் மூன்று வரிசையில் உள்ளவர்களை குறிப்பிட்ட இடம் ஒன்றை கடந்துசெல்லுமாறு வேண்டப்பட்டனர்.
அந்த இடத்தில் முகமூடி அணிந்து இராணுவ உடை அணிந்த ஐந்துபேர் கதிரையில் அமர்ந்திருந்தனர். முகமூடி அணிந்தவர்களுக்குப் பின்னால் ஏழு முஸ்லீம்கள் நின்றுகொண்டிருந்தனர். முகமூடி அணிந்தவர்கள் சைகை காட்டும் வேலையில் வரிசையில் இருந்த மக்கள் வேறொரு பக்கத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை முடிவுற்றதும் வரிசையில் இருந்து இழுத்தெடுக்கப்பட்ட 158 பேரும் அவர்களது உறவினர்களால் காட்டப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் இராணுவத்தினரால் இழுத்துச்செல்லப்பட்டு இ.போ.ச பஸ்வண்டியில் ஏற்றி கொண்டுசெல்லப்பட்டனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று 05.09.2022 திங்கட்கிழமை பல்கலை மாணவர்களால் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்கள் மற்றும் பல்கலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.