ஜூலை 2022 இல் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. பல கட்சிகள் பலம் பெற்று அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வலுப்பெற்று இருக்கின்றது.
பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் பல கட்சிகளுடன் தமிழர் பிரச்சினை சார்ந்து நாம் பேசி வந்திருக்கிறோம். பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கட்சிகளுடன் எமது உறவை வலுப்படுத்தி வந்திருக்கிறோம்.
ஜூலை மாதம் பிரெஞ்சு பாராளுமன்றம் கூடி, இன்றைய உள்நாட்டு பொருளாதார சூழலில், பிரெஞ்சு வாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலை உயர்த்தும் சட்டங்களை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை இயற்றியபின், கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.
பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆதரவுத் தளத்தை வலுவூட்டும் முகமாகத் தொடர்ச்சியான சந்திப்புக்களை நாம் மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.
இந்தச் சூழலிலே ஆகஸ்ட் 25, 26, 27 ஆம் திகதிகளில் பசுமை கட்சி (Eelv) தமது அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக Grenoble நகரில் தமது கட்சியின் வருடாந்த கோடைகால சந்திப்பை உருவாக்கி இருந்தது.
இந்த நிலையிலேயில் இந்தக் கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் பேரவையும் கலந்துகொண்டு தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள், வர இருக்கும் ஜெனிவா கூட்டத்தொடரில் பிரான்சு அரசிடம் நாம் எதிர்பார்ப்பது, தொடர்ச்சியான எமது செயல்பாடுகள், போன்ற விடயங்கள்பற்றிப் பேசப்பட்டது.
இதைப்போல் பல கட்சிகள் தமது கோடைகால சந்திப்புக்களை செய்து வருகின்றன, இதன் தொடர்ச்சியாகச் செப்டம்பர் 9, 10, 11 நடைபெறும் Fete de la Humanite, மாபெரும் ஒன்று கூடலில் எமது செயற்பாடுகள் தொடரும்.
எமது அரசியல் போராட்டத்தில் நாம் வாழும் நாடுகளில் நடைபெறும் மாற்றங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டும் சர்வதேச புவியியல் சூழலில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தை முன் நகர்த்த, இனஅழிப்புக்குள் உள்ளாகி இருக்கும் எமது மக்கள் சுதந்திரமாக வாழ, எமது தொடர்ச்சியான போராட்டம் முக்கியமானது.
ஜெனிவா நோக்கிய செயல்பாடுகளில் ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையின் அங்கத்துவ நாடுகளின் வாக்குகள் மிக முக்கியம். செப்டம்பர் 12 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 7 ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் நாடுகளின் ஆதரவைப் பெறும் செயற்பாடுகள் பல புலம்பெயர் கட்டமைப்புகளுடன் சேர்ந்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இன்று சிறிலங்கா அரசு தனித்தனியாகப் புலம்பெயர் அமைப்புகளைத் தமது வலைக்குள் கொண்டு வரும் செயற்திட்டங்களை முன்வைத்துச் செயற்படும் சூழலில், நாம் மிகக் கவனமாகச் செயற்பாடுகளை முன் நகர்த்த வேண்டிய காலம்.
இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு எமது மக்கள் எங்களைச் சுற்றி நடப்பதை அவதானித்து செயற்படும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு