பிரான்சில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி!

0
430

பிரான்சில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று (30.08.2022) செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அரசினால் வலிந்து காணமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி சர்வதேசத்திடம் நீதிகோரியும் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2000 நாட்களாகத் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தும் பிரான்சின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது.
பிற்பகல் 14.00 மணியளவில் பாரிசின் முக்கிய நகரமான Paris Montparnasse பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பேரணியாக நகர்ந்து, பிரெஞ்சுப் பாராளுமன்ற முன்றில் வரை தமிழீழத் தேசியக்கொடி, கறுப்புக்கொடி, பதாதைகள் மற்றும் சுலோகங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தி பிரெஞ்சு அரசை நோக்கி உரிமைக் கோசங்களை எழுப்பியவாறு பயணித்ததைக் காணமுடிந்தது.
பல வெளிநாட்டவர்களும் எமது போராட்டத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டதுடன் பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச்சென்றனர்.
ஊர்வலத்தில் நீளக் கோலில் வலம் வந்த மனிதரையும் அனைவரும் வியந்து நோக்கினர். குறித்த மனிதர் கறுப்புடையணிந்து பிரெஞ்சுமொழி வாசகங்களையும் தன்னோடு கொண்டுசென்றார்.
பிரெஞ்சுப்பாராளுமன்ற முன்றிலில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. அங்கே வலிந்து காணமலாக்கப்பட்ட பலரின் புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதன்முன்பாக போர்க்குற்றம் மற்றும் வலிந்துகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பலர் தமது சாட்சியங்களை பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் பகிர்ந்திருந்தனர்.
பங்குபற்றிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்ததுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியுரைக்கப்பட்டது. நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here