
பிரான்சின் தலைநகர் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த 24 ஆவது தேர்த்திருவிழா நேற்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. கோவிட் பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் போன குறித்த திருவிழாவிற்கு வழமைபோன்று இம்முறையும் பிரான்சின் பல பகுதிகள் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் தேர்த்திருவிழாவில் மக்கள் கலந்துகொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது.
அடியார்களின் காவடி, பாற்குடம், தீச்சட்டி போன்ற நேர்த்திகளுக்கு மத்தியில் சிலம்பாட்டம் உள்ளிட்ட வழமையான அணிவகுப்புக்களுடன் மூன்று தேர்களும் வீதி வலம் வந்ததை அடியார்களோடு வெளிநாட்டு மக்களும் கண்டு இன்புற்றதைக் காணமுடிந்தது.
இம்முறை வழமைக்கு மாறாக பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்துகொண்டதாக அவதானிகள் தெரிவித்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினர் தாயக வெளியீடுகளை காட்சிப்படுத்தியிருந்ததுடன் சில துண்டுப்பிரசுரங்களையும் வழங்கியிருந்தனர். வர்த்தகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு தமது பொருட்களை மலிவுவிலையில் விற்பனைசெய்திருந்தனர்.
பிரெஞ்சு காவல்துறையின் கடும் பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்கு மத்தியிலும் சில அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். காவல்துறையினரும் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, குளிர்பானங்கள், குடிநீர் போன்றவை ஆங்காங்கே வழங்கப்பட்டதையும் காணமுடிந்தது.
சிறப்பு நிகழ்வுகளாக தமிழீழ இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்களின் இசையில் தமிழீழ எழுச்சிகானங்களும் பக்திகானங்களும் மக்களைத் தம்வசம் கட்டிப்போட்டிருந்தையும் காணக்கூடியதாக இருந்தது. ஏனைய சிறப்புக் கலைவடிவிலான் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
அனைவருக்கும் குறித்த தேர்த்திருவிழர் நீண்ட இடைவெளியின் பின் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(எரிமலைக்காக பாரிசில் இருந்து கங்கைவேந்தன் – படங்கள் – யூட், வினுஜன்)






























































