ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில் மீண்டுமொருமுறை கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசு முயற்சித்துவருகின்றது. இதற்காகவே சர்வக்கட்சி அரசு என்ற போர்வையில் தமிழ்க் கட்சிகளை அழைத்து பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சம்பந்தமாகவும் மேலோட்டமாக பேசப்படுகின்றது. இதன் பின்னணியில் உள்நோக்கமே உள்ளது. ஜெனிவா தொடரில் கால அவகாசம் பெறுவதே அரசின் நோக்கமாக உள்ளது.” – எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.