சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் ஆகஸ்ட் 30 ஆம் நாளும் 10.08.2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ்மக்களின் போராட்டத்தின் 2000 ஆயிரம் நாட்களும்!
இலங்கைத்தீவில் திட்டமிட்ட ரீதியில் குறிப்பாக தமிழர் தேசமான வடக்குக் கிழக்குப் பகுதியிலும், தென் இலங்கை சிங்கள தேசத்திலும் 1983 யுத்தம் ஆரம்பித்த காலத்திற்கு முன்பும் அதன் பின்னர் 2009 வரையிலும் ஓர் இலட்சத்து 40 ஆயிரம்பேர் காணாமல் போயிருப்பதாக ஐ. நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு உள்ள நிலையில் யுத்தம் நிறைவடைந்து இன்று 13 வருடங்களை எட்டியுள்ளதும் அப்பாவி தமிழ்மக்கள் மீது தொடுத்த போரினால் இன்று ஒட்டுமொத்த சிங்கள தேசம் பொருளாதார துன்பத்தையே அனைத்து இலங்கை தேச மக்களுக்கும் கொடுத்துள்ளது.
காலங்களும், நாட்களும் கடந்து செல்கின்ற நிலையில் காணாமல் போன தமது உறவுகளுக்கும், இறுதியுத்தத்தின் போது சர்வதேசத்தையும், அதன் சட்டவிதிகளையும் நம்பி கையளித்த உறவுகள் தம்மால் கையளித்த உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆனது என்ற பொறுப்புக்கூறலினை சர்வதேசத்திடம் கோரி இரவு, பகலாக வீதியோரத்தில் முன்னெடுத்து வரும் சாத்வீகப் போராட்டமானது 12.08.2022 ஆம் நாள் 2000 ஆயிரம் நாட்களைத் தொட்டுள்ள நிலையில் நீதிகோரி தொடர்ச்சியாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம்மவர்களின் உறவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஏற்படுத்துமுகமாக நீதிக்கான போராட்டத்தை 12.08.2022 (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிப் பிரதேசத்தில் முன்னெடுக்கின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் தாய்தந்தையர், பிள்ளைகள், துணைவன் துணைவிமார்கள், உறவுகள், நண்பர்களால் முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் போராட்டத்திற்கும், இதனை சர்வதேசமயப்படுத்தி நாம் வாழும் நாட்டின் அரசுகளுக்கும், மனிதநேய அமைப்புகளுக்கும் கொண்டு செல்லும் பொறுப்பும் புலத்தில் தேசியப்பணியாற்றும் அனைவருக்கும் உரித்தான வரலாற்றுக் கடமையாகும். தமது உறவுகள் பலரை உயிருடன் கையளித்துவிட்டு காணாமல் பரிதவித்த பல பெற்றோர்கள் விடையின்றி இறந்து போயினர். பலர் இன்னும் கண்ணீருடனும், கவலையுடனும், கையளித்தவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கான நீதிவேண்டித் தாயகத்திலும், புலத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் ஒன்றுதிரளவேண்டும். இது சம்பந்தமான சனநாயகப் போராட்டத்தினை இத்தனை காலங்களும் கடின உழைப்பினால் முன்னெடுத்து வரும் தாயகக் கட்டமைப்புக்களின் முன்னெடுப்பிற்கு அனைத்து தமிழ்மக்களும் தமது பரிபூரணமான பங்களிப்பை நல்கவேண்டும்.
தாயகத்தில் 2000 ஆயிரம் நாட்களாக சனநாயப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரான்சு வாழ் தமிழ்மக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு –