
யாழில் கிருஷாந்தி படுகொலை நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 7:கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை நினைவு நாள்!

1977 பிறந்த 19 வயது ஈழத் தமிழ் மாணவி 7.08.1996 அன்று இனவெறி இராணுவத்தினரால் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கொடிய அநீதிக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
கைதடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கல்வியில் அதி உச்சமாக மிளிர்ந்த மாணவி.

க.பொ.த-சாதாரண தரப் பரீட்சையில் ஏழு அதி உயர் சித்திகளும் ஒரு உயர் சித்தியும் பெற்றவர்.
கிறிசாந்தி தனது ஆறாவது வயதிலேயே தனது தகப்பனாரை இழந்தவர். இவரது தகப்பனார் இ. குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம இலிகிதராக சேவையாற்றியவர்.

கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.
1996 செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை, முற்பகல் 10.30 மணியளவில் கிருஷாந்தி குமாரசுவாமி, க. பொ. த (உயர் தர) இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் “யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

இதை கிருஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர்.
வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிரியப் பணியை ஆற்றியவர்) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார்.
கிருஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாருக்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிருஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது.
அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப. நோ. கூ. சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது தனிப்பட்ட பயிற்சி வகுப்பு (டியூஷன்) போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ். சென் ஜோன் கல்லூரி க.பொ. த உயர் தர முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர்.
கைதடி இராணுவக் காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிருஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சி.
ஆரம்பத்தில் “நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவுமில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை” என தர்க்கம் புரிந்துள்ளனர்.
தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார்.
அத் தருணத்தில் கிருஷாந்தி ஏற்கெனவே மூன்று சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது என நினைத்ததோடு ‘இவர்களுக்கோ உறுதியாகத் தகவல் கிடைத்திருந்தது’ என்பதையும் உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதைக் கருதி அம்மூவரையும் பிடித்து, வதைத்து கொன்று விட்டனர்
அத்தோடு வெறி அடங்காத பேய்களாக அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும், ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் மேலும் கிருஷாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்தனர்.
இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே பாலியல் வல்லுறவு செய்திட அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சாட்சிகள் மூலமே இந்த கொடிய உண்மைகள் வெளியே வந்தன!
இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்தனர்.
இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக சாட்சிச் சான்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வரை நீதி கிட்டவில்லை!
பி.கு:
இரத்தக் கறை தோய்ந்த ஆட்சியாளர்களோடு இன்று கைகுலுக்கும் தமிழ்த்தலைமைகளை எங்கள் மண்ணில் அரச படையினர்க்குப் பலியான கிரிசாந்திக்களின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது!
நன்றி: சாமி