
மாவிலாறு யுத்தம் தொடங்கப்பட்டு சுமார் நான்கு நாட்களுக்குள் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரமல்ல, உலக நாடுகளையே கதிகலங்க வைத்த மூதூர் படுகொலையென வர்ணிக்கப்படும் அக்ஷன் பாம் (பட்டினிக்கு எதிரான அமைப்பு) தொண்டர்களான 17 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். (04.08.2006) அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இப்படுகொலையில் அக்ஷன் பாம் தொண்டர்களான முத்துலிங்கம் நர்மதன், சக்திவேல் கோணேஸ்வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்கராஜா பிறீமஸ், ஆனந்தராஜா மோகனதாஸ் ரவிச்சந்திரன், ரிஷிகேசன், கனகரத்தினம் கோவர்த்தனி, கணேஷ் கவிதா, செல்லையா கணேஷ் சிவப்பிரகாசம் ரொமிலா, வயிரமுத்து கோகிலவதனி, அம்பிகாவதி ஜெயசீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரைராஜா கேதீஸ்வரன், யோகராஜா கோடீஸ்வரன், முரளீதரன் தர்மரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக் ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப்படுக்கப் பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகள் தெரிவித்தன
இந்தப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தாங்கள் கடமையாற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தை அடையாளப்படுத்தும் சீருடைகள் அணிந்து இருந்ததுடன் நிறுவன வளாகத்துக்குள்ளேயே பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். மாவிலாறு யுத்தம் மூண்டதன் காரணமாகவும் உக்கிரமான போர் இருதரப்பினருக்குமிடையே வெடித்த நிலையில் வெளியில் செல்ல முடியாமலும் மாற்றார் வந்து பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் நிறுவன வளாகத்துக்குள் சுமார் மூன்று நாட்கள் உணவின்றி, உறக்கமின்றி, பாதுகாப்பைத் தேடமுடியாமல் அடைபட்டுப்போய்க் கிடந்த அவர்களுக்குத்தான் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அந்தக் கொடூரம் நடந்தது. இப்படுகொலையில் பலியானவர்களில் மணம் புரியாத 4 இளம் பெண்கள், ஏனைய 13 பேரும் ஆண்களாவர்.
இப்படுகொலையைக் கேள்வியுற்ற பல்வேறு சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை ஸ்தாபனங்கள், ஆர்வலர்கள், கதிகலங்கிப் போனர்கள். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட பல அமைப்புக்கள் இப்படுகொலையை, வன்மையாகக் கண்டித்திருந்தன. மனிதகுல வரலாற்றில் கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனம் என அவை சாடியிருந்தன .
அக்கொடூரக் காட்சியைப் பார்த்த சிலர் இப்படி விவரணம் செய்தார்கள். மனித மூளைகள் தரையெல்லாம் சிதறிக் கிடந்தன. மனித சரீரத்தின் உன்னதமான பார்வை மணிகள் பரவிக் கிடந்தன என அக்காட்சியை சம்பவம் நடைபெற்றதற்குப் பின் பார்த்தவர்கள் அழுது புலம்பியதாக அந்நாளிலே செய்தி வெளியிட்ட ஏடு ஒன்று தெரிவித்திருந்தது.
கடந்த 25 வருடகால வரலாற்றில் இவ்வாறானதொரு கொடுமையான படுகொலை நடந்ததில்லையென பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் பட்டினிக்கு எதிராக செயற்பட்டுவரும் அமைப்பான ACF தெரிவித்திருந்தது