வவுனியா – செட்டிகுளம் அடப்பன்குளம் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டிகுளம் அடப்பன்குளம் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினர் சட்டவிரோதமான முறையில் வேலியில் மின்சாரத்தை பாச்சியமையினால் அயல்வீட்டை சோ்ந்த திருமதி க. இராஜேஸ்வரி என்ற 55 வயது பெண் மரணமடைந்தார்.
இந் நிலையில் இன்று(20) அப்பெண்ணின் இறுத்திக்கியைக் இடம்பெற்றபோது செட்டிகுளத்தை சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டு விசேட அதிரடிப்படையினாரின் முகாமை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இம் முகாம் அமைந்துள்ள காணி கிராம அபிவிருத்தி சங்கம், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், கமநலசேவைகள் நிலையம், பொது விளையாட்டு மைதானம் என்பன அடங்கிய பிரதேசமாக காணப்படுவதனால் இக் காணியை விடுவிக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் என். சார்ள்ஸிடமும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜ், இ.இந்திரராஜாவிடமும் மகஜரொன்றினையும் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை நாம் கொண்டு செல்வோம். அதேவேளை பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான முகாம்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என கூறி வருகின்றோம். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிசாரே இன்று சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றமையால் இன்று அப்பாவி பெண் மரணமடைந்துள்ளார். எனவே உடனடியாக இம் முகாம் அகற்றப்பட வேண்டும். வட மாகாணசபை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நிச்சயமாக ராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். இதன் காரணமாக பெண்கள் சிறுவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே இதனை அகற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன் என்பதுடன் இரா. சம்பந்தனிடமும் இது தொடர்பில் தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.