திட்டமிட்டபடி ஜெனீவாவில் மிகப்பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நாளை 21ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருக்கின்றது. போரின் போது மிகப்பெரும் அவதிக்குள்ளான தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தங்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணை செய்ய வேண்டும். தமிழருக்கான தீர்வை வலுப்படுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகளுடன் இப்பேரணி இடம்பெறுகின்றது.
இதில் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவிஸ், சுவீடன், பெல்ஜியம், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து தமிழர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாட்டு புலம்பெயர் தமிழ் மக்களே கவனிக்கின்றனர்.
இம்முறை மக்கள் பெருமளவில் பேரணியில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ”தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி அணி திரள்வோம்” என்ற தொனிப் பொருளில் இப்பேரணி ஜெனிவா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெறுகின்றது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழகம் மலரட்டும் என்ற திலீபனின் சொற்பதங்களுடன் பல்வேறு பரப்புரை அறிவித்தல்கள் பல நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டிருந்தன. ”காலத்தின் தேவை இது- கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைக்கோர்த்து நீதி கேட்போம் வாரீர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாளை ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேரணி பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் மூன்று மணிக்கு ஐ.நா ஜெனிவா பணிமனை முன்றலைச் சென்றடையும். அதைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் இடம் பெறும். ஆயிரக்கணக்கான தமிழர்களை சந்திக்க ஜெனிவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.