ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்று (24.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கார்லே கோணேஸ் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக பொதுச்சுடரினை 95 விளையாட்டுக்கழகத் தலைவர் திரு.யூட் ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சுத் தேசியக்கொடியை கார்லே கோணேஸ் நகரபிதா ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, ஐரோப்பியக்கொடியை நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.ஜெயா அவர்கள் ஏற்றிவைத்தார். நெதர்லாந்து நாட்டுத் தேசியக்கொடியை நெதர்லாந்து மாநிலப்பொறுப்பாளர் திரு.சுதா அவர்கள் ஏற்றிவைக்க சுவிசு நாட்டுத் தேசியக்கொடியை சுவிஸ் தெரிவு அணித்தலைவர் ஆகாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து ஈகைச்சுடரினை 14.05.1995 அன்று வில்பத்துக் காட்டுப் பகுதியில் வீரகாவியமடைந்த மாவீரர் லெப்.இரத்தினம் பிரசன்னா அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா அவர்கள். வெளிநாட்டில் இருந்து அழைப்பை ஏற்றுவந்த கழகங்களையும் வீரர்களையும் வரவேற்றதுடன் அனைத்துக் கழகங்களினதும் வீரர்களினதும் ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டார்.
தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்திப் போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர்.
பிரதம விருந்தினர்களாக 95 மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (Monsieur le Députe Carlos Martens Bilongo) கார்லோஸ் மார்தென் பிலோன்கோ அவர்களும் கார்லே கோணேஸ் நகரபிதா அவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளர்ந்தோர் பிரிவில் 12 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
ஈழவர் வி.க., வட்டுக்கோட்டை வி.க., சுவிஸ் தெரிவு அணி,, நெதர்லாந்து தெரிவு அணி, சென்.பற்றிக்ஸ் வி.க., அரியாலை வி.க., 93 வி.க., றோமியோ நவம்பர் வி.க., பாடுமீன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க. , 94விண்மீன்கள் வி.க., என். எஸ்.பரிஸ் வி.க. ஆகிய விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
15 வயதின் கீழ் பிரிவில் 9 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
ஈழவர் வி.க., வட்டுக்கோட்டை வி.க., சுவிசு தெரிவு அணி, சென்.பற்றிக்ஸ் வி.க., அரியாலை வி.க., சி.எஸ்.ரி 93 வி.க., அக்கினி வி.க., றோமியோ நவம்பர் வி.க., காவலூர் வி.க. ஆகிய 9 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
சமநேரத்தில் இரண்டு மைதானங்களில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
போட்டிகளின் நிறைவில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன், இரண்டுபிரிவுகளிலும் முதல் மூன்று பிரிவினருக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டது.
15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை சுவிசு தெரிவு அணியும் இரண்டாமிடத்தை தமிழர் வி.க. 93 அணியும், மூன்றாம் இடத்தை அரியாலை வி.க. அணியும் பெற்றுக்கொண்டன.
15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக சுவிசு தெரிவு அணியைச் சேர்ந்த லக்சன் அவர்களும், 93 விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஆதிபன் அவர்களும், இறுதியாட்ட நாயகனாக சுவிசு தெரிவு அணியைச் சேர்ந்த சிறிரங்கநாதன் கிருவரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
வளர்ந்தோர் பிரிவில் முதலிடத்தை ஈழவர் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை 93 விளையாட்டுக்கழகமும். மூன்றாமிடத்தை சுவிசு தெரிவு அணியும் பெற்றுக்கொண்டன.
வளர்ந்தோர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக 93 விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மசூத் அவர்களும், ஈழவர் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றயன் அவர்களும், இறுதியாட்ட நாயகனாக ஈழவர் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த துசாந் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
நெதர்லாந்து, சுவிசு நாடுகளில் இருந்தும் அணிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தன.
தமிழீழ தேசவிடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் வீரத்துடனும், தீரத்துடனும், அர்ப்பணிப்புடனும் அல்லும் பகலும் எதிரியுடன் போராடி எதிரியிடம் இருந்து எமது மக்களைப் பாதுகாத்த எம்தேச வீரர்களில் ஒருவர் லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார்) அவர்கள்.
சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஒருவரலாற்றுச்சண்டையில் இரண்டு சிங்கள இராணுவத்தை உயிருடன் பிடித்து அவர்களைக் காப்பாற்றி மீண்டும் அவர்களின் குடும்பத்திடம் கையளித்து போரில் போர் தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழ் மக்களின் உன்னத குணாதிசயங்களை உலகிற்கும், சிங்கள மக்களுக்கும் அன்றே உணர்த்த காரணமானவர். அன்று வாழ்ந்தவர்களுக்கு தெரிந்த இந்தச்செய்தி இன்றைய புதிய வளர்ந்து வரும் தலைமுறைக்குத் தெரியவேண்டும். இவர்களை நாம் மறக்காது எம் இதயத்தில் வைத்து மதிப்பளித்து வணங்க வேண்டும். இவர்களையும், இவர்கள் போன்ற உன்னதர்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும், அவர்களை மதிப்பளிக்கவுமே இப் போட்டிகளையும் நினைவு நாட்களையும் கடைப்பிடிப்பதன் ஊடாக அடுத்த தலைமுறைக்கும் இத்தனை தியாகத்தை தெரியப்படுத்தவேண்டும். அப்போது தான் நல்லெண்ணமும், ஒற்றுமையும் ஏற்படும். அதனை ஏற்படுத்தவிடாது தடுக்கின்ற முயற்சியில் சிங்கள அரசியல் வாதிகள் இன்று வரை பயணித்துக்கொண்டேயிருக்கின்றனர்.
இன்று அனைத்துலக ரீதியில் நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றித் தமது வரலாற்றுக் கடமையைச்செய்த சுவிசு நாட்டு அணிக்கும், நெதர்லாந்து நாட்டு அணிக்கும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும், தமிழர் விளையாட்டுத்துறை சார்பாகவும் நன்றியோடு கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது .
நிறைவாக கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் போட்டிகள் நிறைவடைந்தன.
(படங்கள்: மிதுலா, கஜினி, வினு இவர்களுடன் கங்கைவேந்தன்)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)