கறுப்பு யூலை – 1983
ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடைமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக் காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன. சிறைகளில் இருந்த 53 தமிழக கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். 600 வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக் குட்படுத்தப்பட்டனர். இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசு மூடிமறைத்துவிட்டது.
யூலைப் படுகொலைகள்
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து, தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்கத்தின் பயங்கரவாதம், பல வழிகளில், பல வடிவங்களில் வெளியிடப்பட்டன.
சிங்கள அரசுகளால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட பெரிதும், சிறிதுமான இனக்கலவரங்கள், ஆயிரக்கணக்கில் எம் மக்களை காவு கொண்டன. எமது மக்களின் உழைப்புக்கள் சூறையாடப்பட்டன. எமது கலைகள் பாரம்பரியங்கள், அடையாளங்கள் நீண்டகால நோக்கில் அழிக்கப்பட்டன.
ஈழத்து தமிழ் மக்களின், துன்பம் நிறைந்த வரலாற்றில், 1983ம் ஆண்டு யூலைப் படுகொலை ஆறாத காயத்தை ஏற்படுத்திச் சென்றது.
கைதிகளாகி, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால், நிராயுதபாணிகளாக நின்ற 53 தமிழர்கள், ஆயுதம் தரித்த மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர்.
உலகிலேயே எங்குமே நிகழ்ந்திராத கொடுமை, புத்த பூமியிலே நிகழ்த்தப்பட்டது.
வீடுகள், கடைகள், மத வழிய்ப்பாட்டுத்தலங்கள் எல்லாம் தமிழர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். மனித நாகரீகம் வெட்கித்து நின்றது.
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. உணர்வுகள் மறுக்கப்பட்டன, உயிர்வாழ்தலுக்கான உத்தரவாதமும் மறுக்கப்பட்டது. 1948ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் 1956, 1958, 1974, 1977, 1981 என்ற வரிசைகளில் தொடர்ந்த மிக மோசமான இந அழிப்பு வடிவமான இனக்கலவரங்களின், முதிர்ச்சி நிலையை, 1983ம் ஆண்டுக் கலவரம் புலப்படுத்திநின்றது.
இந்த நிலை இன்றும் தொடர்கின்றது. சிங்கள இனவாத அரசினால் தமிழ்ப் பிரதேசங்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு “முள்ளிவாய்க்கால்” வரை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சிங்கள இனவாத பூதத்திடமிருந்து, எமது மக்களைக் காத்தலுக்கான உணர்வுபூர்வமான போராட்டம், முன்னெப்போதும் இல்லாத வகையில் உறுதியுடன், ஒப்பற்ற தியாகங்களை மனதிலிருந்து முன்னெடுத்து செல்வோமாக.
நீண்ட கால அடக்கு முறைக்கு நேரடியாக முகம் கொடுத்த நாம், அதிலிருந்து எம்மையும் எமது எதிர்கால சந்ததியையும் காப்பதே எமக்குண்டான இன்றுள்ள பிரதான கடமையாகின்றது.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம்.
எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும்.
ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, கறுப்பு யூலைக் கனத்த நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.
சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி: ஈழ அகதி.