யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று 23.07 2022 சனிக்கிழமை கறுப்பு ஜூலை நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது
கறுப்பு ஜூலை ஆறாத வடு!
ஒவ்வொரு வருடமும் ஜுலை 23ம் திகதியை ‘கறுப்பு ஜுலை’ தினமாக உலகெங்கும் தமிழர்கள் நினைவுகூருகின்றனர்.
சிறுபான்மை இனம் மீது பெரும்பான்மை இனம் பிரயோகிக்கின்ற இனஒடுக்குமுறை நடவடிக்கையின் அடையாளமாக 1983 ஜுலைக் கலவரம் மேற்கோள் காட்டப்படுகின்றது. அதேசமயம், சிறுபான்மை இனங்களை சரிசமமாகப் பேண முடியாத நாடென்றும், இன ஒடுக்குமுறையைக் கடைப்பிடிக்கின்ற நாடென்றும் இலங்கையை சர்வதேசம் அடையாளப்படுத்துவதற்குக் காரணமாகவும் அன்றைய இனக்கலவரம் அமைந்து விட்டது.
1983ம் ஆண்டு ஜுலை 23ம் திகதியன்று யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தென்னிலங்கை எங்கும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் தென்னிலங்கையில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். வீடுகள் தீவைக்கப்பட்டும், உடைமைகள் சூறையாடப்பட்டும் தமிழர்களுக்கு அன்று நடந்த கொடுமைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை ஆகும்.
கொழும்பிலும் தென்னிலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழர்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் வன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அக்கொடுமைகளை அன்றைய அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் மிகப் பெரும் அநீதி!
அனைத்துக் கொடுமைகளும் நடந்து முடிந்து, இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய பின்னரே வன்முறையைத் தணிப்பதற்கு அன்றைய அரசு முன்வந்தது. அப்பாவிகளின் உயிர்களும் உடைமைகளும் அழிந்த பின்னர் உயிர்தப்பியவர்கள் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
இக்கொடுமையின் பின்னரே இலங்கைத் தமிழினத்தின் வெளிநாட்டுப் புலம்பெயர்வு ஆரம்பமானது. தமிழ்நாட்டுக்குச் சென்று தஞ்சமடைந்தோர் ஒருபுறம், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அடைக்கலம் புகுந்தோர் மறுபுறம்….
இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது உறுதியானதால் தமிழினம் மேற்குலகம் நோக்கி வேகமாகப் புலம்பெயரத் தொடங்கியது. சர்வதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக இப்போது தமிழர்கள் ஆகிப் போனார்கள்.
1983 ஜுலைக் கலவரத்தின் பின்னரான வரலாற்றில் இலங்கையில் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலப் பகுதியானது இரத்தக்களரி நிறைந்ததாகவே இருந்தது.
இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேசம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் எதுவுமே பலனைத் தந்து விடவில்லை. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் ஒரு அம்சமாக இந்திய அமைதிப் படையினர் இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு வருகை தந்து நிலைகொண்ட போதிலும், இம்மண்ணில் அமைதி திரும்பவில்லை.
இலங்கையில் ஒவ்வொரு தடவையும் நடைபெற்ற தேர்தல்களில் எத்தனையோ அரசாங்கங்கள் மாறிமாறி வந்து சென்று விட்டன. அன்றைய அரசுகள் ஒவ்வொன்றுமே பதவிக்கு வருவதற்கு முன்னர் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாக உறுதிமொழியையும் அளித்திருந்தன.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர் தரப்பில் பலம் பெற்று விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அரசாங்கங்களுக்கிடையிலும் எத்தனையோ தடவைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. எனினும் அப்பேச்சுவார்த்தைகள் பலன் எதையுமே தந்து விடவில்லை.
இறுதிக் கட்டப் போரில் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டு விட்டதனால் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. எனவே இனிமேல் யுத்தமென்பது நாட்டில் இருக்கப் போவதில்லை. இனப்பிரச்சினையென்று ஒன்றும் இனிமேல் இல்லை. ஆகவே வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது’ என்றே தென்னிலங்கைப் பெரும்பான்மை இன மக்களில் அநேகம் பேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களும் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் பலம் பொருந்திய போராட்ட இயக்கமாக இருந்த காரணத்தினாலேயே இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தன. புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டு விட்டதனால் தமிழினத்தின் பேரம் பேசும் பலம் இப்போது இல்லாமல் போயுள்ளது. எனவே தமிழினத்திற்கு எந்தவொரு அரசும் இனிமேல் தீர்வைத் தரப் போவதில்லை’ என்றே தமிழர்கள் கருதுகின்றனர்.
பெரும்பான்மை இனம் அரசியல் தீர்வைத் தரப் போவதில்லையென்ற கருதுகோள் யதார்த்தமானதாக இருக்கக் கூடும். எனினும் அரசியல் தீர்வுக்கான தாகம் தமிழர்களின் உள்ளத்தில் என்றுமே இருந்து கொண்டே இருக்கப் போகின்றது.தமிழினத்தின் ஏக்கம் தீர்க்கப்படும் வரை நல்லிணக்கம் என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சுக்களாகும். அந்த ஏக்கத்தின் பதிவுகளில் கறுப்பு ஜுலையும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
எமக்கான காலம் நிச்சயம் பிறக்கும் என்ற மனஉறுதியுடன் இலட்சிய வேட்கை நோக்கி பயணிப்போம்…