இராஜபக்ஸ நிழல் அரசாங்கமே போராட்டக்காரர் மீது வன்முறை என்கிறார் சஜித்!

0
132

இராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய ‘ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்’ இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதிவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள், பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, ‘உயர் உத்தரவுப்படி’ இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.
போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.
ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும். எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு, ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.
முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய ‘ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்’ நடக்க ஆரம்பித்துள்ளது. ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.
இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த ‘ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்’ மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக் கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் ‘ராஜபக்ஸ நிழல் அரசுக்கு’ எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here