இராணுவ அடக்குமுறை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

0
242

காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகங்களை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் நுவன் போபகே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டகாரர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், அவர்கள் இருக்கும் இடம் தெரியப்படுத்த வேண்டும். பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அத்துடன், இராணுவத் தளபதிக்கும் செய்தி அனுப்பியுள்ளேன்.

எவ்வாறாயினும், சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திர தன்மைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், படையினர் சிவில் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது தொடர்பான வீடியோ ஆதரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சட்டம் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here