யாழில் அண்மைக்காலமாக போதைப் பொருள் பாவனைக்கு இளம் தலைமுறையினர் ஈர்க்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட தாகத் தெரிவிக்கப்படும் டெனிஸ் என்ற 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் இணைந்து போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், பின்னர் குளிர்பானத்தை அருந்திய சில நிமிடங்களில் வலிப்பு வந்து உயிரிழந்துள்ளார் என யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன,
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சிறுநீர் மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது என யாழ் ஊடக தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
இளைஞனின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பள்ளி மாணவர்களே அதிகமாக இலக்குவைக்கப்படுகின்றார்கள். இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டத்திடம் இருந்து இலகுவாகத் தப்பிச் செல்வதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பலரும் விமர்சித்துவருகின்றனர்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து மிகுந்த அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாக உள்ளது.
(எரிமலையின் செய்திப்பிரிவு)