பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 27 ஆவது வருடமாக நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று (17.07.2022) ஞாயிற்றுக்கிழமை மிகவும் எழுச்சியாக நடைபெற்று முடிந்தது.
கடந்த (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை , மற்றும் (16.07.2022) சனிக்கிழமை ஆகிய தினங்களில் தெரிவு மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று (17.07.2022) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
அன்றையதினம் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான லெப்.சங்கர் ஞாபகார்த்த நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை 1997 இல் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப் இளந்தேவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். இவரோடு மாவீரரின் சகோதரரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான மகேஸ் அவர்களும் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து விளையாட்டுத் திடலில் பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் வீரச்சாவடைந்த கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து கழகங்களின் கொடிகளை கழகப்பொறுப்பாளர்கள் சமநேரத்தில் ஏற்றிவைத்தனர்.
ஒலிம்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் அருமைத்துரை சிறினிவாஸ் மற்றும் மெய்வல்லுநர் தலைவி மகேந்திரன் லிசா ஆகியோரிடம் ஒப்படைத்தார். இருவரும் கழக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.
வீரர்களின் சார்பில் சிறினிவாஸ் அவர்களும் நடுவர்களின் சார்பில் தீர்ப்பாளர் திரு.பரா அவர்களும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க. 95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து கழக வீரர்களின் அணிநடை அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. அணிவகுப்பு மரியாதையினை பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட 95 பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் Monsieur le Députe Carlos Martens Bilongo, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவிப்போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன், சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் குறித்த பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டிகளில் சென் பற்றிக்ஸ் அணியும் நல்லூர்ஸ்தான் அணியும் விறுவிறுப்பாக மோதியமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் நல்லூர்ஸ்தான் அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
அணிநடை அணிவகுப்பில் யாழ்ட்டன் வி.க. முதலிடத்தையும் நல்லூர்ஸ்தான் வி.க. இரண்டாமிடத்தையும் தமிழர் வி.க. 93 மற்றும் தமிழர் வி.க. 94 மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.
தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
குறித்த மதிப்பளித்தலினை 95 பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் (Monsieur le Députe Carlos Martens Bilongo) கார்லோஸ் அவர்களும் வழங்கிவைத்து வீரர்களை வாழ்த்தி தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை திரு.பார்த்தீபன் , திருமதி ராகினி, திரு.கிருஷ்ணா ஆகியோர் தமிழிலும் மற்றும் செல்வி துளசி பிரெஞ்சு மொழியிலும் நிகழ்வினைத் தமது அறிவிப்பின் ஊடாகக் கொண்டு சென்றிருந்தனர்.
அனைத்து செயற்பாட்டாளர்களும் தமது பணியினைத் திறம்பட செய்திருந்தமை பாராட்டத்தக்கது.
பிரான்சில் நடைபெற்று முடிந்திருந்த தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2022 கடும் வெயிலுக்கும் மத்தியில் சிறப்பாகவே கடந்த காலங்கள் போன்று நிறையவே போட்டியாளர்கள், மக்கள் செயற்பாட்டாளர் கழகங்களின் பங்களிப்புடன் நடைபெற்று முடிந்திருந்தது. கடும் வறட்சிகாரணமாக 40° பாகை தாண்டியிருந்தமையால் பிரான்சு சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலாக நிறையவே தண்ணீர் பருகுமாறு கேட்டுக்கொண்டிருந்தமைக்கு அமைய விளையாட்டுத்திடலிலும் அறிவிப்பாளர்கள் தொடர்ச்சியாக இதுகுறித்த அறிவுறுத்தல்களை பகிர்ந்து கொண்டதோடு கடந்த காலத்தை விட இந்தத் தடவை பயிற்சிபெற்ற முதலுதவியாளர்கள் அதிகமானவர்கள் இணைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் போட்டிகளில் பாதிப்புற்றவர்களுக்கான முதலுதவிகளைச் செய்து அவர்களை மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ள வைத்தனர்.
தமிழீழ உணவகம் குழந்தைகள், பெரியவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விரும்பிய உணவுகள் குளிர்பானங்களை மலிவு விலைகளில் வழங்கியிருந்தனர்.
கோவிட் என்னும் பெரும் பேரிடருக்கு பின்னரும் இன்னும் முற்றுமுழுதாக விடுபடாத நிலையிலும் கடந்த மூன்று நாட்களும் பங்குபற்றிய அத்தனை மெய்வல்லுநர் போட்டியாளர்கள், வீரவீராங்கனைகளுக்கும் மற்றும் உதைபந்தாட்டச்சம்மேளனத்தினருக்கும், மெய்வல்லுநர் நடுவர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாகவும், தமிழர் விளையாட்டுத்துறையின் சார்பாகவும் பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் திடலில் நின்று நன்றியோடு கரம் பற்றிகொள்வதாக கூறியிருந்தார். இதேபோல் தேசம் நோக்கிய அனைத்து கலை, அரசியல், சமூகநலச் செயற்பாடுகளிலும் எமது மக்கள் பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தடகள விளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தை நல்லூர்ஸ்தான் வி.கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் வி.க. 93உம் பெற்றுக்கொண்டன.
தடகள விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை 893 புள்ளிகளைப்பெற்று யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை 549 புள்ளிகளைப்பெற்று நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் 470 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 உம் பெற்றுக்கொண்டன. தமிழீழத் தேசியக்கொடி பிரெஞ்சுக் கொடி, கழகங்களின் கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)