இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை; குறித்த தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும்; இத்தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு ஆத ரவான நிலைப்பாட்டை எடுத்தால் அதை மாற்ற இராஜதந்திர ரீதியில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை தமி ழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சட்ட சபையில் கொண்டு வந்தபோது சட்ட சபை குறித்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது.
இத் தீர்மானங்களை முன்வைத்து முதல்வர் ஜெய லலிதா தமிழக சட்ட சபையில் ஆற்றிய உரையைப் பார்த்த போது நம் கண்கள் கலங்கிக் கொண்டன.
ஒரு தாயின் பாசம் வெளிப்பட்டதை சற்றுத் தொலைவில்-இழப்பின் வாட்டத்துடன் இருக்கும் சேய்கள் பார்த்தால் நிலைமை எப்படியிருக்குமோ அந்த உள்ளார்ந்தமான தாய் -சேய் பாசப்பிணைப்பை ஜெயலலிதா அம்மையார் ஆற்றிய உரையின் போது அனுபவிக்க முடிந்தது.
கடவுளே! நீ எங்கள் மீது கருணை கொண்டிருந்தால் 2009ஆம் ஆண்டில் நடந்த வன்னிப் பேரவலத்தின் போது தமிழகத்தின் முதல்வராக அம்மை யாரை இருத்தியிருக்கலாம் அல்லவா? என்று நினைக்கும் அளவில் ஜெயலலிதா அம்மையாரின் உரை அமைந்திருந்தது. இது மட்டுமல்ல; ஈழத் தமி ழர்களே! உங்களுக்காக நாங்கள் என்றும் பக்க பல மாக, பக்கத்துணையாக இருப்போம் என்பதை தமிழக மக்கள் எங்களுக்குக் கூறுகின்ற நம்பிக்கை வார்த்தைகளாக முதல்வர் ஜெயலலிதாவின் உரையும் சட்ட சபைத் தீர்மானமும் அமைந்துள் ளன. அந்த வகையில் ஈழத்தமிழர்களின் கனவை தமிழக மக்கள் என்றோ ஒரு நாள் நிறைவேற்றி வைப்பர். அப்போது எந்தத் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது என்பதை மட்டும் இவ்விடத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.
எதுவாயினும் உள்ளக விசாரணை என்பது எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைத் தரமாட்டாது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மா னத்தை வலியுறுத்தி வந்த அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத் தோடு தங்களின் முடிவுகளையும் மாற்றியுள்ளன.
இத்தகைய மாற்றங்கள் ஆட்சி மாற்றத்தால் மட்டுமன்றி காலம் கடப்பதாலும் ஏற்பட்டதாகும்.
எனவே உள்ளக விசாரணை என்பதன் ஊடாக எட்டப்படும் முடிவுகள்; தீர்ப்புகள் ஒருபோதும் படைத் தரப்பை குற்றவாளிகளாகவோ அல்லது யுத்தம் நடத்திய ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிக ளாகவோ அடையாளப்படுத்த மாட்டா என்பது நிறுத் திட்டமான உண்மை.
இந்நிலையில் மீண்டும் காலக் கடத்தல்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான தீர்வுகளையும் தரப் போவதில்லை என்பதுடன் எதிர்காலத்தில் தமிழர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகள் அதிகம் அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை. ஆட்சி மாற்றத்துக்காக சர்வதேச விசாரணையை தவிர்ப்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகத்தனமாகும்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணையைத் தவிர வேறு எந்த விசாரணை யும் நீதியைப் பெற்றுக் கொடுக்காது என்பதால் அமெரிக்கா சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் பணிவான கோரிக்கையாகும்.
ஆசிரிய தலையங்கம் வலம்புரி